பெருமாளுக்கும் தாயாருக்கும் ஆண்டுதோறும் நடக்கும் தெய்வத் திருமணத்திற்கு நிர்ணயித்த திதி ஆவணி சுக்ல பஞ்சமி. நிலவரம் அறிய 9:30 அளவில் செல்கிறோம். நாங்கள் நுழையும்போது தேசிகர் ஆராதனை நடப்பதைக் கண்டு குழம்பினோம். தேசிகர் உற்சவம் ஏற்கெனவே தொடங்கியது எங்களுக்கு முற்றிலும் தெரியாது. 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையே தொடங்கியதாகக் கேள்விப்படுகிறோம். திருக்கல்யாணத்திற்காகத் தெற்குப் பிரகாரத்தில் கட்டிய பெரிய மேடையும் எங்களைத் திடுக்கிட வைக்கிறது. பத்திரிகை பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் என்று குறிப்பிட்டபோது, இரு மூல மூர்த்திகளுக்கும் தனித்தனித் திருமஞ்சனங்கள் என்று கருதி, அதனால் கேமராக்களைக் கொண்டுவராததே திடுக்கிடலுக்குப் பெரும்பாலும் காரணம். மாறாக, இப்பெரிய மேடையையும், திருமஞ்சனத்திற்குத் தயாராகும் பெருமாள், தாயார் உற்சவ மூர்த்திகளையும் கண்டோம். ஆமாம்தானே! அது எங்களுக்கு ஏன் தோன்றவில்லை? கேமராக்களை எடுத்துவர விரைந்தோம்.
திரும்பியதும், திருமஞ்சனம் தொடங்கக் காத்திருந்தபோது, உதவிக்கு எங்களைச் சட்டென்று அழைத்தார்கள். எங்களை அணுகியவரின் பின்னே சென்று, விரைவிலேயே பண்டரிநாதர் சன்னிதிக்கு வெளியே அமர்ந்து, கல்யாணத்திற்குப் பின் வழங்கவிருக்கும் மஞ்சள் நூல்களை முடிச்சிட்டுக்கொண்டிருந்தோம். இவ்வேலையில் ‘இழுத்துக் கட்டப்பட’ மகிழ்ச்சியுடன் இசைந்தோம், கோயில் இயக்கம் என்ற உயிருள்ள துணியில் ‘இழைகள்’ ஆனோம் என்று சொல்லலாம்.
முற்பகல் 11 அளவிலேயே திருமஞ்சனம் தொடங்குகிறது. மிக விரிவானது – திரவியங்கள் முடியவே இல்லை! குறிப்பாகப் பால் வழிந்துகொண்டே இருந்தது; பலவகைப் பழங்கள் பனிச்சரிவு போலத் தெய்வங்களின்மேல் இறங்கின.
மாலை – நிகழ்வுகள் நள்ளிரவு வரை நீள்கின்றன. பெருமாளும் தாயாரும் மலரெறிந்து விளையாடி, மாலை மாற்றி, வாழைப்பழமும் பாலும் ஊட்டப்பெற்று, மண்டபத்திற்குச் செல்கிறார்கள். ரமணன் பட்டாச்சாரியார் ஹோமம் செய்கிறார். மணமகனுக்கும் மணமகளுக்கும் புதிய ஆடைகள் அளிக்கப்படுகின்றன. பெருமாளாக நரேஷ் பட்டாச்சாரியாரும் தாயாராகத் தினேஷ் பட்டாச்சாரியாரும் ஹோமத்தில் பங்கேற்று, புனித நெருப்பை ஏழு முறை வலம் வருகிறார்கள். நூல் கட்டும் சடங்குகள் [மாங்கல்யம்] நிறைவடைந்த பின், பெருமாள்-தாயார் காதலுடன் குளத்திற்கு உலாவச் செல்கிறார்கள்; அங்கே இனிய நாதஸ்வரத்தின் துணையுடன் திருமணக் கிண்ணங்கள் கவிழ்க்கப்படுகின்றன [இது என்ன சடங்கு?]. இறுதியில், ஆடியபடி, கண்ணாடிப் பள்ளியறைக்குள் செல்கிறார்கள்; அங்கே ஊஞ்சலில் அமர்த்தி, பலவகைப் பழங்களை ஊட்டி, பிறகு இரவு ஓய்வெடுக்க விடுகிறார்கள். தெய்வத் திருமணம் நிறைவடையும்போது நள்ளிரவு 12:30.




