இப்பணி பற்றி

ஸ்தலம்

இப்பணி

‘ஸ்தலம்’, புதுச்சேரி சைவ ஆய்வு மையத்தின் (Centre for Shaiva Studies) கோயில் ஆவணப் பணியாகும். 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நகரின் பதினைந்து கோயில்களை ஒரு முழு வழிபாட்டு ஆண்டு முழுவதும் தொடர்ந்து கவனித்து வருகிறோம்; ஒவ்வொரு கோயிலும் கடைப்பிடிக்கும் எல்லா வழிபாடுகளையும் திருவிழாக்களையும் பதிவு செய்து போற்றும் வரை இதைத் தொடர்வோம். புதுச்சேரியின் கோயில் பண்பாட்டைப் பற்றிய இத்தகைய கடைசிப் பதிவு, “சந்தைகளும் திருவிழாக்களும்” (Fairs and Festivals) என்ற 1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆவணத்தில் வெளிவந்தது. அதன் பிறகு நகர் வளர்ந்துவிட்டது; அதன் முன்னுரிமைகள் விரைந்து மாறி வருகின்றன. இந்நகரின் வழிபாட்டு வாழ்வு இப்போது என்னவாகியுள்ளது, எதை நோக்கிச் செல்கிறது, அதைத் தொடர்ந்து பேணி வளர்க்க நமக்கு என்ன தேவை என்பவற்றைக் குறிக்க, மற்றோர் அடிப்படைப் பதிவை உருவாக்க ‘ஸ்தலம்’ விரும்புகிறது.

ஸ்தலப் புராணம்

இப்பணி 2026 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று செட்டிக் கோயிலில் தொடங்கியது; ஆனால் அதற்கு வெகு முன்பே அது தன்னை விதைத்துக்கொண்டிருந்தது, அதன் எழுத்தர்களாக ஆகவிருந்தவர்களும் அறியாமல். மாசி நிலவு வளர்ந்து முழுமை பெற்றதன் மறுநாள் காலை. அகத்திய முனிவர் இந்த வேதபுரியில் ஆசிரமம் அமைத்திருந்ததற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்; முன்னுரைத்த உத்தர யோகி அதே இடத்திற்கு வந்ததற்கு மேலும் ஒரு நூறாண்டுக்குப் பின். நகரின் தெய்வங்கள் தங்கள் தீர்த்தமாகும் நீரில் நீராடக் கூடின. வடக்கிலிருந்து வந்த ஒரு மெல்லிய உருவம், கடலில் மின்னும் கதிரொளியில் நின்றது; தடித்த ஒரு நூல் அவருடைய சிறு குடை.

கடல் தூவலில் தில்லைக் கூத்தன் ஆடுவதைப் பார்த்தபடி அவர் கேட்டார்: இது என்ன இடம்? இந்நெறிகளைக் காத்து வரும் இக்கோயில்கள் எவை? இந்த மாயத்திற்கும் இந்த அற்புதங்களுக்கும் ஏன் ஒரு பதிவும் இல்லை? அன்றாட வாழ்வின் அளவிட முடியாதவற்றில் ஆழ்ந்து, உலகின் அழைப்புகளில் சிதறி, மயக்கம் கலைந்து, திணறி, யாரும் கேட்கவில்லை. எனவே அம்மனிதர் சிரித்தார், நெற்றியில் நீறு பூசினார், சென்றுவிட்டார்.

ஆனால் அத்தேய்பிறை இருளில், மழையில்லாப் பருவத்தில் தனித்த ஒரு தாழ்ந்த மேகம்போல், அக்கேள்வி தங்கி நின்றது. அன்றிரவு அது ஒரு கனவில் விழுந்தது; அக்கனவில் வசிட்ட முனிவர் தீபாவுக்கு (எங்கள் பணித் தலைவர்) தோன்றினார். பிரம்மனின் மனத்தில் பிறந்த மைந்தர்; மைத்ராவருணியாக, அகத்தியரின் இரட்டையராக, இது அவருடைய இரண்டாம் பிறவி. வேதபுரியிலிருந்து வருவதாகச் சொன்னார்; அங்கே கண்டது தம்மை வருத்தியதாகச் சொன்னார். சன்னிதிகளில் இன்னும் விளக்கெரிகிறது, தொண்டு நடக்கிறது; ஆனால் அவற்றைப் புனிதமாகவும் அருமையாகவும் ஆக்கிய கதைகள் சிலருக்கே தெரியும். ஸ்தல புராணங்கள் இருக்கின்றன; ஆனால் காத்து வருவோர் சிலர் மட்டுமே. திருவிழாக்கள் பெரிதாகிவிட்டன; ஆனால் ஊர்வலத் திருமேனிகளை எதிர்கொள்ள வருவோர் குறைந்துவிட்டனர். கோயில்கள் பல; ஆனால் அவை இருப்பதன் காரணமே கேள்விக்குரியதாகிவிட்டது. அயோத்தி மன்னர்களின் புரோகிதராக இருந்தவர் அவர், யுகங்கள் திரும்புவதைக் கண்டவர்; கலியுகத்திலும் இறைவனின் லீலை குறைவதில்லை, துண்டு துண்டாக அதிகம் சிதறியே இருக்கிறது என்பதை அறிந்தவர்.

எனவே, பாடலுக்கும் கதைக்கும் ஏங்கிய நெஞ்சுடைய அவரிடம் முனிவர் சொன்னார்: அர்ச்சகர்களிடமிருந்தும், கற்களிடமிருந்தும், இன்னும் நினைவில் வைத்திருப்போரிடமிருந்தும் இந்நினைவுகளைத் திரட்டு; தெளிவிழந்த, குழம்பிய, சிதறிய இக்காலத்தின் மக்கள், இம்மாபெரும் முயற்சியின் வழியாக, இறைவன் உலகில் நிகழ்த்தும் விளையாட்டை, தங்கள் ஒரே உண்மையான மூலமாக, மீண்டும் ஒருமுறை கொண்டாடட்டும்.

அவர் உதவி கேட்டார்; உதவி வந்தது: சூரியனுக்குச் செந்நிறக் கம்பளங்கள் நெய்யப் பிறந்து, அதற்கே பெயர் பெற்ற அருணாதித்யா என்ற சிறுவனின் உருவில்; மைக்கோடுகளிலும் தூரிகையிலும் பேசும் அபிஷேக் என்ற ஓவியரின் உருவில். ஒலித்தும் கேளாத, தெரிந்தும் காணாத, இருந்தும் உணராத புதுச்சேரியின் வழிபாட்டு வாழ்வின் கதைகளைச் செவிமடுக்க அவர்கள் ஒன்றாக விழைகிறார்கள்; மாமுனிவர் கண்டு மீண்டும் மகிழவும், வடக்கிலிருந்து வந்த மனிதர் திரும்பி வந்து புதிதாய்ச் சிரிக்கவும்.

ஏன் கோயில்கள், ஏன் இக்கோயில்கள்?

புதுச்சேரியை நினைத்தால், பெரும்பாலும் நினைவுக்கு வருபவை அதன் கடற்கரை, “பிரெஞ்சு கஃபேக்கள்”, கேமராவை அழைக்கும் பழமை அழகுள்ள வாசல்கள். பெரும்பாலும் காலனியக் கால மயக்கம் உங்களை ஈர்க்கும். நகரின் கோயில்களை நினைத்துப் பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு; பிரெஞ்சுக்காரர்கள் முதன்முதலில் வந்த 1673இலேயே அவற்றுள் சில இருந்ததாக அறியப்பட்டாலும்கூட. மூச்சுவிடாமல் விரியும், இந்நகர் இன்றும் பேணி வரும் வழிபாட்டு வாழ்வும் அவ்வாறே: உணரும் அளவு சற்று நின்றால், அது எங்கும் தெரிகிறது, கேட்கிறது, துடிக்கிறது; ஆனால் எப்போதும் வெளிப்படையாக இல்லை; காரணம், அது வாழும் ஒன்று, விற்கும் ஒன்று அல்ல.

தீபா ரெட்டியும் அருணாதித்யா தாஸும் ‘புதுச்சேரியின் கோயில்கள்’ பற்றிய ஓராண்டு ஆய்வைத் தொடங்கியுள்ளனர். அவற்றின் நாட்காட்டிகள், வழிபாடுகள், கதைகள் எவை? அவற்றைப் பேணி வருவது எது, எந்த உலகை அவை இன்னும் ஒன்றிணைத்து வைத்திருக்கின்றன? எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதி, புதுச்சேரியைக் கோயில்களின் பார்வைக்குத் திருப்புவது; இந்நகரின் கதையை அதன் தமிழ் மக்களின் விழைவுகள் வழியாக, ஞானபூமி, வேதபுரி, சித்தர் பூமி—30க்கும் மேற்பட்ட சித்தர் ஜீவ சமாதிகளின் இடம்—எனச் சொல்வது. மற்றொரு பகுதி, இந்நகர் வாழும் இந்து வாழ்வின் முழுமையில் அதை அறிவது. நம்மிடமிருந்தும் மறைந்துவிடாதபடி, இவ்வாழ்வுமுறைகளையே மீண்டும் மையத்திற்குக் கொண்டுவர முயல்கிறோம்.

250க்கும் மேற்பட்ட கோயில்களிலிருந்து 15 கோயில்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்; பெரும்பாலானவை புதுச்சேரியின் புகழ்பெற்ற புல்வார்டு சாலைகளுக்குள் உள்ளவை. பெரிய கோயில்களும் சிறியவையும், சிவன், பெருமாள், அம்மன் கோயில்களும், எப்போதும் இருந்து வருபவையும், வந்து தோன்றியவையும்: இந்நகரையும் அதன் சமய, ஆன்மிக ஏக்கங்களையும் ஒன்றாகக் காட்டும் நினைவுச் சின்னங்களாக இவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில் நம் கோயில்கள் நினைவுகளைக் காப்பவை மட்டும் அல்ல; நகரும் அதன் சமூகங்களும் தனிப்பட்ட ஆறுதல் தேடவும், தமக்குரியதை இழக்காமல் நிற்கவும், வேண்டிக்கொள்ளவும், கனவுகள் காணவும், விரைந்த மாற்றத்துடன் ஒத்துச் செல்லவும், இருந்துவந்ததைக் காத்து அது என்றும் நிலைக்கச் செய்யவும் உரிய வழிகள்: பாரதியார் ஒருமுறை சொன்னதுபோல், “அங்கும் இங்கும் எங்கும்”.

நாங்கள் பணிபுரியும் முறை

பக்தர்களாக நாங்கள் கோயில்களுக்குச் செல்கிறோம்; கையில் குறிப்பேடுகளும் கேமராக்களும் இருக்க நேர்ந்தவர்கள். அனுமதி கேட்கிறோம், எவற்றைப் படமெடுக்கலாம் என்றும் கேட்கிறோம். அறிவிப்புப் பலகைகளைக் கவனிக்கிறோம்; என்ன நடக்கவிருக்கிறது, எப்போது என்று பதிவு செய்கிறோம்; ஒவ்வொரு கோயிலின் நிகழ்வுகளையும் சுற்றி எங்கள் வாழ்வைத் திட்டமிடுகிறோம்: அதிகாலையில் எங்கே இருப்பது, மாலையில் எங்கே இருப்பது, நண்பகலில் எதை முடிப்பது, ஒத்த தருணம் பல இடங்களில் வரும்போது கோயிலிலிருந்து கோயிலுக்கு எப்படிச் செல்வது, எல்லாவற்றையும் செழுமையாகவும் முழுமையாகவும், சரியாகவும் நுட்பமாகவும் திரட்ட எங்கே நிற்பது. எல்லாமே அன்றன்றே எழுதும் குறிப்பாகத் தொடங்குகிறது; இங்கே காண்பது அதிலிருந்து சிறிதளவே திருத்தியது. உங்களுடன் நாங்கள் பகிர்வது எங்கள் மகிழ்ச்சிகள், எண்ணங்கள், சிந்தனைகள்; கேட்டவர்களுக்கு நூற்றுக்கணக்கில் வாட்ஸ்அப்பில் அனுப்பிய எங்கள் புகைப்படங்கள்; நாங்கள் சந்திக்கும் எல்லோரிடமிருந்தும், சில நேரங்களில் தடுமாறினாலும், நிச்சயமாக நீண்டு தொடரும் எங்கள் கற்றல். அவர்கள் எங்களுக்குப் பூக்கள், நேரம், பல அன்புச் செயல்கள், ஆசிகள், ஒரு சிட்டிகை விபூதி, அரிசி மாவு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றைத் தருகிறார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, நாங்கள் காண்பதை மரபுகளின் வெளியிலிருந்து அல்ல, உள்ளிருந்து சிந்திக்கும் வழிகளைத் தருகிறார்கள். அவர்களுக்குத் தகுதியான எழுத்தர்களாக இருப்போம் என்று நம்புகிறோம்.

வாழும் எவரைப் பற்றியும் அவருடைய ஒப்புதல் இல்லாமல் எதுவும் வெளியிடுவதில்லை. ஒரு கோயிலின் நிலம், வருமானம், நிர்வாகம் ஆகியவை நாங்கள் அறிபவற்றின் ஒரு பகுதி; ஆனால் அவை எங்கள் பணியின் பின்னணியே, நாங்கள் வெளியிடுபவை அல்ல.

பெயர்

ஸ்தலம் (Sthalam, स्थलम्) — சமஸ்கிருதச் சொல்; தமிழகம் முழுவதும் தென்னகத்திலும் அன்றாட வழக்கில் உள்ள சொல் — புனித இடத்திற்கு மரபே தரும் சொல். தேவாரப் பதிகங்கள், தாம் பாடும் கோயில்களைப் பாடல் பெற்ற ஸ்தலங்கள், அதாவது “பாடல்களைப் பெற்ற இடங்கள்” என வகுக்கின்றன.

ஆனால் ஒரு ஸ்தலம் ஒருபோதும் வெறும் இடம் அல்ல. ஒவ்வொன்றுக்கும் அதற்கெனத் தல புராணம் உண்டு: தெய்வம் ஏன் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தது என்ற கதை; தல விருட்சம் உண்டு: அதன் புனித மரம்; தலத் தீர்த்தம் உண்டு: அதன் புனித நீர். இப்பணி பதிவு செய்வதற்குப் பெயரிடுகிறது இச்சொல், அவ்வளவே: நினைவுச் சின்னங்களை அல்ல, உயிருள்ள ஓர் இடத்தை.

நூல்

புதுச்சேரியின் கோயில்களைப் பற்றிய நூல் ஒன்று தயாராகி வருகிறது. அதன் அமைப்பு தற்காலிகமானது.

உருவாகி வரும் நூல்

மையம்

‘ஸ்தலம்’, சைவ ஆய்வு மையத்தின் (Centre for Shaiva Studies) பணியாகும். சைவ மரபுகளை ஆய்வதற்காகப் புதுச்சேரியில் உள்ள இந்த ஆய்வு நிறுவனம், 2022 ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டது. மையம் சைவ நூல்களின் ஆய்வுப் பதிப்புகளைத் தயாரிக்கிறது (காமிகாகமத்தின் முதல் தொகுதி 2025இல் வெளிவந்தது); நூல், சுவடி, கல்வெட்டு ஆய்வில் அறிஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இன்று வாழும் சைவத்தையும், அதன் கோயில் மரபுகள், வழிபாடுகள், பக்தி நெறிகள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்துகிறது.

குழு

தொடர்புக்கு

இக்கோயில்களுள் ஒன்றை நீங்கள் நன்கு அறிந்திருந்தால், அல்லது அவற்றைப் பற்றிய நினைவுகளோ புகைப்படங்களோ ஆவணங்களோ உங்களிடம் இருந்தால், உங்களிடமிருந்து அறிய மகிழ்வோம். கட்டுரைகள் எழுத விரும்பினாலும், உங்கள் ஊரின் கோயில்களை ஆவணப்படுத்த விரும்பினாலும் எங்களுக்கு எழுதுங்கள்.

namaste@shaivastudies.in