ஸ்தலம்
Sthalamபுதுச்சேரி
ஒவ்வோர் ஊருக்கும் அதற்கெனக் கோயில்கள் உண்டு: தெருக்கோடியில் ஒன்று, குளத்தங்கரையில் ஒன்று, நாற்சந்தியில் ஒன்று. ஒவ்வொரு கோயிலிலும் இருள் சூழ்ந்த ஒரு சிறிய கருவறை. அங்கே ஒரு விளக்கின் ஒளியில் தெய்வம் குடிகொண்டிருக்கிறது.
இச்சன்னிதிகளைச் சுற்றித்தான் ஊரின் வாழ்க்கை நடக்கிறது. தெரு விழிப்பதற்கு முன்பே கோயில் விழித்துவிடுகிறது. மணியோசையால் நேரத்தைச் சொல்கிறது; நாள், திதி, திருவிழாக்களைக் கணித்துக் காத்து வருகிறது. உணவளிக்கிறது, ஊராரை ஒன்று சேர்க்கிறது. ஊரின் நேர்த்திக்கடன்கள், செல்வங்கள், நினைவுகள் என எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருக்கிறது. ஒரு குடும்பத்தால் தனியாகச் சுமக்க முடியாததையும் தாங்கி நிற்கிறது. தலைமுறை தலைமுறையாக மக்கள் இந்த விளக்குகளைக் காத்து வருகிறார்கள்; இந்த விளக்குகளும் அவர்களைக் காத்து வருகின்றன. இவை எரியும் வரை, தான் யார் என்பதை ஊர் மறப்பதில்லை.
எல்லோருடைய கண்முன்னே நடந்தாலும், அரிதாகவே எழுதப்பட்டுள்ள இவ்வாழ்வைப் பதிவு செய்வதே ‘ஸ்தலம்’ முயற்சியின் நோக்கமாகும். இப்பணி புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறது. சைவ ஆய்வு மையத்தின் (Centre for Shaiva Studies) ஆதரவில், தீபா ரெட்டி தலைமையிலான சிறு குழு ஒன்று, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நகரின் சிறியதும் பெரியதுமான சுமார் இருபது கோயில்களை ஒரு வழிபாட்டு ஆண்டு முழுவதும் தொடர்ந்து கவனித்து வருகிறது. இக்கோயில்களின் நித்திய பூசைகள், திருவிழாக்கள், இவற்றில் தொண்டு புரிந்து இவற்றைப் பேணி வரும் மக்கள், இக்கோயில்கள் காத்து வரும் கதைகள் ஆகியவை இப்பணியில் இடம்பெறுகின்றன.
கோயில்களின் நாட்காட்டிகள், வழிபாடுகள், கதைகள் எவை? அவற்றைப் பேணி வருவது எது, எந்த உலகை அவை இன்னும் ஒன்றிணைத்து வைத்திருக்கின்றன? ஓர் ஊர் தன் நம்பிக்கைகளையும், தன் சமூகங்களின் வரலாறுகளையும், தன் பாடல்களையும் கலைகளையும் வைத்திருக்கும் இடமாகிய கோயிலை ‘ஸ்தலம்’ பதிவு செய்கிறது, கொண்டாடுகிறது.
இவ்வாண்டின் களப்பணியிலிருந்து, ஒவ்வொரு கோயிலின் சித்திரத் தளவரைபடங்களுடன் எழுதப்படுகிறது.