நாங்கள் அடைந்தபோது கௌசிக கோயில் முருகன் வீதிகளில், ராவணனாக இருக்க வேண்டிய, ஆனால் 10 தலைகள் இல்லாத ஒரு வாகனத்தில் இருந்தார். தோள்களில் சுமக்க மிகப் பெரியது என்பதால், பத்துத் தலை ராவண வாகனம் மாற்றப்பட்டது என்று பின்னர் அறிந்தோம். ஃபர்ஹானும், நாங்கள் அடிக்கடி கண்ட வேறு பலரும் கொண்ட ஒரு குழு அதைச் சுமந்துகொண்டிருந்தது. அவர்கள் எல்லோரும் அங்கே இருந்தார்கள், நேரமும் இருந்தது; எனவே இதைச் செய்ய முடிவு செய்தார்களாம். நாதஸ்வரக் கலைஞர்களுடன் மூன்று மேளக்காரர்கள் உடன் சென்று, சற்றே தனித்துவமான தாள ஒலிகளையும் ஈர்க்கும் இசையையும் உருவாக்கினார்கள். வழக்கத்தைவிடக் குறுகிய பாதையில் சென்றார்கள் (ஒருவேளை ‘தோளோட’, அதாவது தோள்களில் மட்டுமே, சுமக்கும்போது செல்லும் பாதையோ?). ஆனால், மற்றபடி நிகழ்ச்சியிலேயே மிகவும் கவனமாகத் தோன்றிய ஒரு கோயில், ஆட்டமின்றி, வீதிகளில் இருந்த எங்களைத் தவிரப் பார்வையாளர் என்று சொல்ல யாருமின்றி, இவ்வாறு தன்னியல்பாக நகர்வதைக் காண்பது ஆர்வமூட்டியது, ஆறுதலாகவும் இருந்தது. ஒருவேளை, முருகனே அதைத் தூண்டினார்.
புஸ்ஸி வீதியும் மகாத்மா காந்தி சாலையும் சேரும் மூலையில், நீண்ட நேரம் நின்றார்கள். அவர்களுக்கு நீரும் குளிர்பானங்களும், தாங்க உதவும் எதுவும் தரப் பலர் நிற்கிறார்கள். ஒரு பூ விற்பவர் கை கையாக மலர்களை வீசினார். சற்று நேரம் கழித்து, நாங்கள் படமெடுக்க மீண்டும் செய்வீர்களா என்று கேட்டோம்: அவர் உடனே இசைந்தது எங்களை வியக்க வைத்தது. இவ்வழியே வரும் எல்லாத் தெய்வங்களுக்கும், கிறித்தவ ஊர்வலங்கள் உட்பட, அவர் இதைச் செய்கிறாராம்; அவரோ உறுதியான இந்து. பெயர் கலியபெருமாள். ஒரு பெரிய கூடை மலர்களை எடுத்து, (மீண்டும் நகரத் தொடங்கியிருந்த) ஊர்வலத்தை எட்ட ஏறத்தாழ ஓடி, முருகனுக்கு அவற்றை வீசுவதில், அப்புகைப்படங்களை எடுப்பதில் நாங்கள் பெற்ற அளவு இன்பம் பெற்றார். மலர்களுக்குப் பணம் கேட்கவில்லை. மாறாக, தம் பல பிள்ளைகளையும், எல்லோரும் நன்றாக இருக்கும் 11 பேரக்குழந்தைகளையும் பற்றிச் சொன்னார். பூ விற்பது கூடுதல் பணத்திற்கான பொழுதுபோக்கு மட்டுமே என்றார். ஆனாலும் பணம் தந்தேன்.
இச்சாதாரணச் சந்திப்புகள் எல்லாவற்றிலும் எத்தகைய மனிதர்களைச் சந்திக்கிறோம். கோயில்களால் எத்தகைய மனிதர்கள் கூடுகிறார்கள்; தெய்வங்கள் வெளிப்படும்போது கோயில்களிலிருந்து என்னவெல்லாம் வழிகிறது. இதெல்லாம் முடிவின்றி நெகிழ வைக்கிறது.




