ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலைப் புதுச்சேரியின் ஆரிய வைசியர்கள் 1921இல் கட்டினார்கள். இச்சமூகத்தின் தலைமைக் கோயில், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதரித்த ஆந்திரப் பிரதேசத்தின் பெனுகொண்டாவில் உள்ளது. இக்கோயிலின் நடுக் கருவறையைச் சுற்றி ஐரோப்பியப் பாணித் தூண்களும் வளைவுகளும் உள்ளன. மூலவர் தெற்கு நோக்கியவர்; மகாத்மா காந்தி சாலையைச் சந்திக்கும் காமாட்சி அம்மன் கோயில் வீதியிலுள்ள கோயிலின் நுழைவாயிலும் அவ்வாறே. கருவறைக்கு வெளியே, அம்மனின் வலப்புறத்தில் விநாயகர், இடப்புறத்தில் முருகன்.
இக்கருவறைப் பகுதியைப் பிரிக்கும் இரண்டு கதவுகள் பின்பிரகாரத்திற்குச் செல்கின்றன; மேலே வண்ணக் கண்ணாடி அரைவட்டங்கள் இக்கதவுகளுக்குத் தனித்தன்மை தருகின்றன. அவற்றின் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் சிறிய அறைகள்; அவை ஒவ்வொன்றும் ஒரு கோயில். வலப்புறக் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள்; இடப்புறக் கோயிலில் மகாலட்சுமி, விநாயகர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகளும், கோயில் கட்டும்போது இவ்விடத்திலேயே கிடைத்த பெரியதும் சிறியதுமான இரண்டு குபேர யந்திரங்களும். ஆரிய வைசிய செட்டிகளின், அதாவது தெலுங்குக் கோமுட்டி சமூகத்தின், தனியார் கோயில் இது; தமிழ் பேசும் புதுச்சேரியில் நெடுங்காலமாகக் குடியேறி வாழும் ஒரு சமூகத்தின் தனியார் கோயிலும்கூட. எனவே பெரும்பாலும் தமிழ் நாட்காட்டியையே பின்பற்றுகிறது; யுகாதி, வாசவி ஜெயந்தி போன்ற சில நிகழ்வுகளுக்குத் தெலுங்கு நாட்காட்டியைப் பின்பற்றுகிறது. பங்குனியில் 13 நாள் ராம நவமி உற்சவமும், புரட்டாசி-ஐப்பசியில் 17 நாள் நவராத்திரி உற்சவமும் இக்கோயிலின் முக்கிய ஆண்டு நிகழ்வுகள்.