இப்படி நடக்க வேண்டியிருந்தது:
24ஆம் நாள்: பராசக்தி அம்மன் படையல்
25ஆம் நாள்: முத்தாளராஜன் படையல்
ஆனால் பராசக்தி நிகழ்வு நேற்றிலிருந்து தள்ளிப்போனது; பௌர்ணமி என்பதாலா, எல்லோரும் களைத்துப்போனதாலா, எது என்று தெரியவில்லை. ஆனால் அந்நாளிலேயே நடந்தது. கண்ணன் புகைப்படங்கள் அனுப்பினார்.
இரவு 8:30 அளவில், முத்தாளராஜனுக்கு உணவு படைத்தார்கள். பராசக்தி படையல் காலையிலேயே முடிந்துவிட்டதாம், எங்களுக்குத் தெரியாது. ஆறு வாழையிலைகளில் சோறு குவித்து, அதன்மேல் பலவகை அசைவக் குழம்புகள் – மீனும் கோழியும் எனத் தோன்றியது – ஊற்றி, பிறகு வேகவைத்த முட்டைகளால் அலங்கரித்தார்கள். அத்துடன் பீரும் வேறு சில மதுவகைகளும் முத்தாளராஜனின் காலடியில். கோயிலில் புதிய முகங்களின் அணிவரிசை. உணவுக்காக மக்கள் நெருக்கியடிக்கிறார்கள். ஒரு பஜனைக் குழு பாடிக்கொண்டிருக்கிறது. என்ன பாடினார்கள் என்று பூசைக்குப் பின் அவர்களிடம் கேட்கும் என் எண்ணம் அடித்துச் செல்லப்பட்டது. ஆராதனை முடிந்த கணமே களேபரம் வெடித்தது. ஒரு முழுக் கூட்டம் கைகளில் வாளிகளும் டப்பாக்களுமாகப் படையலை நோக்கி விரைந்தது; மற்றொரு கூட்டம் பின்புறத்தில் ஏற்பாடு செய்த உணவுப் பந்தியில் இருக்கை தேடி விரைந்தது. நாற்காலிகளை எட்ட முடியாத சிலர், வாழையிலைகளை எடுத்துக்கொண்டு தரையில் அமர்ந்தார்கள். இக்கூச்சலுக்கும் குழப்பத்திற்கும் நடுவே, அலங்கார-அர்ச்சகரும் அவருடைய உதவி அர்ச்சகர்களுள் மற்றொருவரும், “பெரிய பீர் பாட்டில்” காணாமல்போனதாகச் சொல்லப்படுவதைப் பற்றிச் சண்டையிடுவதும் எனக்குக் கேட்கிறது. வெளியேறுகிறேன்.



