காலை காமாட்சி அம்மன் கோயிலில். கோயில் கூரையிலுள்ள மீன் உருவங்களை நீலகண்ட குருக்கள் சுட்டிக்காட்டுகிறார்: பருவ மாற்றங்களை அறிய, படிக்கக்கூடிய அடையாளங்களுடன் சோழர்கள் கட்டிய முறை இது: இம்மீன் (முட்டையிட்ட பிறகு) தெற்கிலிருந்து நீந்தி மேலே வரும்போது, மழைக்காலம் முடிந்து, வெயில் காலம் தொடங்குகிறது. ஆனால் இவை ஒரு கோயிலின் கூரையில் ஏன் என்று தெரியவில்லை. பாண்டிய/ சேர நிலத்தை வென்றதைக் காட்டச் சோழர்கள் மீன் சின்னங்களைப் பயன்படுத்தினார்கள்; ஆனால் வெளித்தூணிலுள்ள (கம்பியருகே) யின்-யாங் மீன் சின்னத்தையோ கூரையிலுள்ளவற்றையோ அல்ல.
நாக பந்தம் என்ற நாக முடிச்சு Carric Bend என்று அழைக்கப்படுவதைக் கண்டறிந்தேன்: “இரண்டு பெரிய, விறைப்பான கயிறுகளை அல்லது கனமான வடங்களை இணைக்க, முதன்மையாகக் கடல்சார் பயன்பாடுகளில் பயன்படும், பாதுகாப்பான, வலுவான முடிச்சு. அதன் வலிமைக்காகவும், கடும் சுமையிலும் சிக்கிக்கொள்ளாமைக்காகவும், எளிதில் அவிழ்க்க முடிவதற்காகவும் அது உயர்வாக மதிக்கப்படுகிறது.” சோழர்களைக் கப்பல் கட்டுபவர்களாகவும் கடலாய்வாளர்களாகவும் அர்ச்சகர் வலியுறுத்தியதுடன் இது ஒருவேளை பொருந்துமோ?
பிரவீன் மோகன் இங்குள்ள இவற்றைப் பற்றி எழுதியும் பேசியும் உள்ளார். அங்கிருந்தே “நாக பந்தம்” என்ற பெயரைப் பெற்றேன் (திருப்புகழின் நாக பந்த மயூர நமோநம நினைவில் ஒலித்தது; அது, காலடியில் பாம்பை “முடிச்சிடும்” மயிலின்மேல் வருபவராகிய முருகனுக்கு வணக்கம் சொல்வது). உண்மையில், காமாட்சி அம்மன் கோயிலின் முருகன் சன்னிதி மயிலிடம், நாக பந்தத்தில் நான் இதுவரை கண்டவற்றுள் மிக வியப்பூட்டும் பாம்பு உள்ளது.
மற்றச் சின்னங்கள் (நுழைவாயில் நிலைப்படி, முக்கிய நடைபாதை அருகே கூரை): நான்கு இதழ்த் தாமரை (சதுர்தள பத்மம்), பெரும்பாலும் பௌதிக உலகுடனும் நான்கு திசைகளுடனும் தொடர்புபடுத்தப்படுவது. பூமியின் நிலைத்தன்மையையும், தெய்வீக ஆற்றல் பௌதிக உலகில் வெளிப்படுவதையும் குறிக்கும், “நிலைப்படுத்தும்” சின்னமாக அது செயல்படுகிறது. தந்திரத்தில்/ யோகத்தில் மூலாதாரச் சக்கரத்தின் 4 இதழ்த் தாமரைச் சின்னத்துடன் தொடர்பு இருக்கலாம். மூலாதார (வேர்) சக்கரத்தின் தலைமைத் தெய்வம் விநாயகர்; பக்தரின் நுழைவை ஆசீர்வதிக்க, இச்சின்னம் அடிக்கடி நுழைவாயில்களுக்கு அருகிலும், கதவு நிலைகளிலும், மண்டபத்தின் கூரைகளிலும் செதுக்கப்படுகிறது. மற்றக் கோயில்களுள் பெரும்பாலானவற்றில் நுழைவாயில் நிலைப்படியில் ஒரு மலர் மட்டுமே; இது மேலும் பழையதாகத் தோன்றுகிறது.
மீதி நேரத்தை நடராஜனுடன் கழித்தோம்; அவர் பொறுமையாக எங்களைச் சுற்றிக் காட்டினார், நிறையக் கதைகள் சொன்னார், எல்லாவற்றையும் நெருங்கிக் காண அனுமதித்தார், தட்சிணாமூர்த்தி சன்னிதியின் மிக அழகிய மனோரஞ்சித மலர்களைப் பரிசாகத் தந்தார். அவ்வளவு அன்பான, இனிமையான மனிதர். கோயிலிலுள்ள எல்லோரும் அப்படியே. மகிழம்/ பகுளம், தென்னை, அத்தி, நெல்லி, செம்பருத்தி, கடம்பு, வேம்பு, விளாம்பழம், தல விருட்சமான வில்வம் ஆகியவற்றுடன் அக்கறையாக ஒரு தோட்டமும் வளர்த்துள்ளார்கள். இந்நாட்களில் ஒரு நகரக் கோயிலில் இருக்கக்கூடிய அளவுக்கு அது ஒரு புனிதத் தோப்பு.
வரும் எல்லோருக்கும் கோயில் நாள்தோறும் அன்னதானம் செய்கிறது; பலர் உணவுக்காகவே வருகிறார்கள். உபயகாரர் இல்லாவிட்டாலும், உச்சிக்காலப் பூசைக்குப் பின், கோயில் நிதியிலிருந்து தருகிறார்கள். இன்று தக்காளி சாதம்.


