பாரதி வீதியிலுள்ள காமாட்சி அம்மன் கோயில் விஸ்வகர்மா சமூகத்தின் கோயிலாகும். இப்போது அமலோற்பவ மாதா பேராலயம் (Immaculate Conception Cathedral) உள்ள இடத்தில் இருந்த வேதபுரீஸ்வரர் கோயில் அழிக்கப்பட்டபோது, இச்சமூகத்தினர் அம்பாளின் திருமேனியை மீட்டுத் தங்கள் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர் என்று சொல்கிறார்கள். பார்வதி ஒருமுறை விளையாட்டாகச் சிவனின் கண்களை மூடியபோது உலகம் இருளில் ஆழ்ந்தது என்பது கதை. சிவனின் கோபத்திற்கு அஞ்சிய பார்வதி, பலவகைத் தவங்கள் செய்ய உலகிற்கு இறங்கிவந்தார். அவரது மிகக் கடுமையான தவம் மாங்காட்டில் (சென்னைக்குச் சற்று மேற்கே); அதைவிட மிகவும் சாந்தமான, அமர்ந்த நிலைத் தவம், புகழ்பெற்றது, காஞ்சிபுரத்தில்; நின்ற நிலையில், சாந்தமான தவம் புதுச்சேரியில். இங்கே அம்பாள் சுமார் 5 அடி உயரத்தில் நிற்கிறார். அவருக்கு மேலே 45 அடி விமானம்; கோயிலின் நுழைவாயில் 5 நிலை ராஜகோபுரம்; இரண்டும் சுட்ட செம்மண்ணால் கட்டியவை. இக்கோயிலிலுள்ள வள்ளி தேவசேனையுடன் கூடிய முருகனும், அசாதாரணமான தட்சிணாமூர்த்தியும் பச்சை நிறச் சாயலுள்ள கருங்கல்லால் ஆனவை; அச்சாயல் அபிஷேகங்களின்போது மட்டுமே தெரிகிறது. இவை இரண்டும் அழிக்கப்பட்ட பழைய வேதபுரீஸ்வரர் கோயிலிலிருந்தே வந்தன என்று சொல்கிறார்கள்.
இக்கோயிலின் முக்கியத் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறும் கிண்ணி ரதோற்சவம். 9ஆம் நாள் தேரிழுப்பு அதன் சிறப்பு; அந்நாள் சித்திரை பௌர்ணமியுடன் பொருந்துகிறது. பல அளவுகளில் குழிந்த உலோகத் தட்டுகளால் (சிறு கிண்ணங்களை ஒத்தவை) அலங்கரித்த, 20 அடி உயரத் தேர்; நிலவொளியில் மின்னும்படி அத்தட்டுகள் மெருகேற்றப்படுகின்றன. திருவிழாவின் பெயர் அதிலிருந்தே வருகிறது; கிண்ணித் தேர்க் கோயில் என்ற வழக்குப் பெயரும் கோயிலுக்கு அதிலிருந்தே வந்தது.