தேசிகர் பத்திரிகை 23 முதல் 27 வரை விடையாற்றி என்று தெரிவிக்கிறது.
பெருமாளுக்கு அதிகாலை 5 மணிக்குத் திருமஞ்சனம். கோயிலில் பெருங்கூட்டம். சன்னிதிக்குச் சென்று வெளியேறும் வளைந்த பாதையின் இருபுறமும் தடுப்புகள். வெறும் 30 ரூபாய்க்கு விரைவுத் தரிசனம் கிடைக்கிறது!
புதுச்சேரிக் கோயில்களைப் பற்றிய நூலைப் பற்றிக் கேட்டபோது, முதன்மைப் பெருமாள் திருவுருவத்தின் கீழேயுள்ள ஓர் அறை/ மண்டபத்தைப் பற்றிய சிறிது வரலாற்றை மணியக்காரர் வெளிப்படுத்துகிறார்; நெருக்கடிக் காலங்களில் சிலைகளை வைக்க அது பயன்பட்டதாக அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அதற்குச் செல்லும் வழி 2018இல் முழுவதும் மூடப்பட்டதாம்.
எண்ணம்: அத்யாபகர்களின் நித்திய இருப்பும் அதன் முக்கியத்துவமும் – பெருமாளைக் கண்டபின் கோயிலிலிருந்து வெளியேறும் பக்தர்களின் உணர்வை அவர்களின் இருப்பு எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கவனித்தல்; வெறுமையும் தேக்கமுமான கோயிலை அல்ல, ஓதலால் உயிரூட்டப்பட்ட கோயிலை விட்டு அவர்கள் செல்கிறார்கள்.
மங்களாசாசனத்தின்போது, புருஷ சூக்தத்தைச் சேர்ந்து ஓத வேண்டாம் என்று தாதாச்சாரியார் தீபா தியிடம் கேட்டுக்கொள்கிறார். எப்போதும் அங்கே இருக்கும், அத்யாபகர்களுள் ஒருவரின் மனைவி இதைக் கவனித்து, பின்னர் ஆறுதல் சொல்ல வருகிறார். பாலினம், தூய்மை முதலியவை பற்றிய நெடுங்காலச் சிக்கல்கள் இன்னும் இனிய சமநிலையைக் காணவில்லை போலும்.
மாலை — தேசிகர் வீதிப் புறப்பாடு. 6:30க்குச் செல்கிறேன்; ஆனால் தாமதம் என்பது தெளிவு. போக்குவரத்தால், ஒரு வீதி தள்ளி, வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகே வண்டியை நிறுத்த வேண்டியதாயிற்று. புறப்பாடு 7:25 அளவிலேயே புறப்படுகிறது; சற்று நேரத்தில், நெடுங்காலமாகப் புதுச்சேரி காணாத மிகக் கனத்த மழை வருகிறது. கனவு போன்ற சூழல். தேசிகர் முன்னே மிதந்து வரத் தொடங்கும்போது மூலையைத் திரும்பினேன். கோயில் ஒலிபெருக்கிகளிலிருந்து ‘ஓம் நமோ வேங்கடேசாய’ என்ற அமைதியான ஓதல் வீதிகளெங்கும் எதிரொலித்தது. தவிலும் நாதஸ்வரமும் மங்கலாகக் கேட்க, பொன்னும் சிவப்புமாகத் தேசிகர் வெளியே, முன்னே மிதந்தார். கனவு போன்ற, ஆனால் தொட்டுணரக்கூடிய வெளிப்பாடு. முதல் மூலையை அவர் திரும்பும்போது மழை வலுத்தது; ஆனால் ஊர்வலத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. கடமையின் அழைப்பு காற்றையும் மழையையும்விட வலியதாக இருந்தது. ஓர் உத்வேகம் எங்கும் நிறைந்திருந்தது.




