அங்காளம்மனின் அமாவாசை மரபு, அவருடைய கடுமையான, அணுக அஞ்ச வைக்கும் வடிவுடன் இசைவதில்லை: மாறாக, அவர் வெளிவந்து ஊஞ்சலில் அமர்கிறார். அருகே சென்று அவரை ஆட்டலாம்; பலர் அதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். இவ்வனுசரிப்பில் மென்மையும் அன்பும் உடைய ஏதோ ஒன்று உண்டு. நான்கு கைகளிலும் அஸ்திரங்களுடன் பெரும்பாலும் அங்கே அமர்ந்திருந்தாலும், நீங்கள் அவரைக் கண்டு அஞ்சுவதில்லை. அவருக்குத் தாலாட்டுப் பாட்டுகள் பாடுகிறார்கள். இவ்விரவில் அவருடைய உக்கிரம் தணிகிறது. பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து சிவனை விடுவித்த பின், அவருடைய கோபம் அவ்வளவு எளிதில் அடங்குவதில்லை என்று நினைக்கிறேன்: இப்புரிதல் அவ்வளவு யதார்த்தமானது; கோபத்தைத் தனியே தணித்து அடக்க வேண்டும். அது நீடிப்பதால், அமாவாசையன்று அவரைச் சடங்குமுறையாக அமைதிப்படுத்தி ஆற்றுகிறார்கள். இவ்விரவில் அதைச் செய்ய முடியும். பிரம்மோற்சவத்தின் முடிவில் நாங்கள் காணும் வரவேற்புச் சூழல் அல்ல இது. தேவிக்கான ஊஞ்சல் உற்சவங்கள் முற்றிலும் வேறு தன்மை கொண்டவை.
இம்மரபுகளுள் சில மேல்மலையனூரிலிருந்து வருகின்றன; அவ்வூர் அங்காளம்மனே இப்பகுதியில் மிக முக்கியமானவர் (அத்தலத்திற்கும் இக்கோயிலுக்கும் ஒரு குறிப்பிட்ட உறவு உண்டு). ஒருவேளை சமயபுரத்திலிருந்தும் இருக்கலாம்; ஆனால் அது மாரியம்மன் கோயில் (எங்கள் முத்துமாரியம்மன் கோயில் பௌர்ணமியை மட்டுமே அனுசரிக்கிறது: உற்சவருக்கு ஒரு சிறிய பூசையும், லலிதா சகஸ்ரநாமம் வாசிக்க வரும் பெண்களுமாக).




