அடுத்த நிறுத்தம்: செட்டிக் கோயில்; அங்கே பள்ளியெழுச்சி ஏற்கெனவே நடந்துவிட்டது, சுவாமி அபிஷேகமும். அம்பாள் தமக்கும் ஓர் அபிஷேகத்திற்குக் காத்திருப்பது போலத் தோன்றினார். முதன்மைச் சன்னிதியில் ஜெயசங்கர் குருக்கள், அம்பாள் சன்னிதியில் மற்றோர் அர்ச்சகர். பள்ளியறையிலிருந்து அம்பாளைக் கொண்டுவரும் இவ்வழக்கத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பக்தர்தான் தொடங்கினார், வழக்கமாக அப்படி எதுவும் இல்லை என்றார் குருக்கள் (சிவன் கோயில் திங்கட்கிழமைகளில் இதைச் செய்கிறது என்று சொன்னேன்; “ஓ” என்று தலையசைத்தார்). எப்படியோ, தேவையில்லை, அம்பாள் பள்ளியறையிலேயே இருக்கிறார் என்று தொடர்ந்தார். உற்சவங்களுக்கு வெளியே செல்பவர்கள் சந்திரசேகரரும் உமையும். எப்போதும் சன்னிதிக்குச் சற்று வெளியே இருக்கும் அம்பாள் உருவம் நிலையம்பாள், அதாவது “நிலையத்தில் (வீட்டில்) இருக்கும் அம்பாள்” என்பது போல; போக சக்தி என்றும் அழைக்கப்படுபவர். பள்ளியறைச் சுவாமி அவருக்கு எதிரே, ஒரு பீடத்தில் அமர்கிறார்.




