3ஆம் நாள் அலங்காரம் மோகினி – சாய்ந்து, கண்கள் பாதி மூடி. வடிவம் உருவாவதைக் காண்கிறோம்; அதில் அர்ச்சகருக்கு நிறைவில்லை; எனவே நாங்கள் முகம் செய்வதற்குத் திரும்பி வரும் முன்னர் அதைக் கலைத்து மீண்டும் செய்கிறார்; முகம் செய்வதை முழுமையாகப் பதிவு செய்கிறோம். உடல் விகிதங்கள், அவற்றை எப்படிக் கொண்டுவருவது, எந்த நிலைக்கு எவ்வடிவ முகம் சிறப்பாகப் பொருந்தும் முதலியவை பற்றி இன்று நிறையப் பேச்சு. இன்று முகத்தின் நிறம் கேசரிப் பொடியால் கிடைத்தது! வழக்கமான சாயங்கள் முதலியவை நிறைவு தருவதில்லை. மோகினியின் பக்கவாட்டில் சாய்ந்த நிலையால், இன்றைய அலங்காரத்தில் அம்பாள் மேலும் தெரிந்தார், எனவே மேலும் வெளிப்பட்டார்: “ஆதார சக்தியா நிக்கறா, அம்பாள்” என்றார் அர்ச்சகர்.
மீனாட்சி அலங்காரத்தின் காணொளியும் இன்று வெளியானது. அலங்காரம் செய்பவர்கள் அர்ச்சகர்களே என்பதால், அதில் அவர்களின் பெயர்களைச் சேர்க்க நினைத்தோம். ஆனால் வேதபுரீஸ்வரர் கோயிலின் அரசு மாமா நினைவுக்கு வந்தார். அம்பாள் முழுவதும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் இருந்த ஆடி வெள்ளிகளுள் ஒன்றில், இந்த அழகிய அலங்காரத்தைச் செய்தவர் யார் என்று அவரிடம் கேட்டேன். ஆனால் குங்குமத்துடன் நடைவழியே சென்றுகொண்டே, “நீங்கள் அப்படி ஒரு கேள்வி கேட்டால், ‘நாங்கள் செய்தோம்’ என்றே எப்போதும் சொல்வோம்,” என்று பதிலளித்தார். கோயில் வெளிகளில் உரிமையும், ஒருவரைச் செய்தவராகக் குறிப்பதும் முற்றிலும் வேறு விதமாக இயங்குகின்றன. ஒரே உரிமையை அங்குள்ள தெய்வ இருப்புக்கே உரியதாக்குகிறார்கள்: அவர் அழைத்தார், எனவே வந்தேன்; இந்நூலை எப்படிச் சுற்றுவது என்று அவர் சொன்னார்; இவ்வலங்காரம் செய்ய அவர் எனக்கு வழிகாட்டுகிறார். இவ்வாறு மாற்றி உரைப்பது, தனிமனிதரையும் அவருடைய குறிப்பிட்ட திறமைகளையும் சாதனைகளையும் மையமாகக் கொண்ட பொதுவான பாராட்டுகளைப் பொருந்தாதவையாகவும், சிக்கலானவையாகவும்கூட ஆக்குகிறது.




