தங்கள் முன்னோரைப் போற்றுவோரின் தனிப்பட்ட பூசைகளைக் காணக் காலையில் சென்றோம்: இது சர்வ பித்ரு அமாவாசை; காலமான முன்னோரைப் போற்றி, அவர்களின் ஆசியை வேண்டுவதற்குரியது; பித்ரு பட்சத்தின் கடைசி நாளைக் குறிப்பது. கோயிலின் பின்புறத்துக் குளத்தின் படிகளில் இத்தகையவை பல நடந்துகொண்டிருந்தன; எங்கெங்கும் ஏராளமான பிளாஸ்டிக் குப்பை என்பது சொல்லாமலே தெரியும் (அதைச் சேகரிக்கத் தொடங்கி, விரைவில் ஒரு பெரிய பை நிறைய வைத்திருந்தேன்; இன்னும் நிறைய இருந்தது; ஆனால் எல்லாவற்றையும் எடுப்பதற்காக மக்களின் பூசைப் பகுதிகளுக்குள் கைநீட்ட விரும்பவில்லை). நான் பிளாஸ்டிக் பொறுக்குவதை, முன்மாதிரியான சேவை என்று அங்கிருந்த துப்புரவுப் பெண்களுக்குக் கல்யாண சுந்தர குருக்கள் சுட்டிக்காட்டினாராம்.
இந்நாளில் மாலையில் நடக்கும், மார்வாடிகளின் லட்சுமி பூசை வழக்கத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்; ஆனால் அதைக் காண நாங்கள் அங்கே இல்லை. பார்த்த உடனே தமிழர் அல்லாதோர் என்று தெரியும் பக்தர்கள் பலர் வந்து, நாகப் பிரதிஷ்டைக்கு அருகிலுள்ள சிவலிங்கத்திற்குத் தாங்களே அபிஷேகம் செய்கிறார்கள் என்பது உண்மை. புதுச்சேரியைத் தங்கள் இல்லமாக்கிய, இங்குள்ள பொது நினைவுச்சின்னங்களில் தங்கள் வழிபாட்டு இடங்களைக் காண விழையும் புலம்பெயர் மக்களுள் அவர்களும் சேர்வர்.




