காலை: ராமர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை
மாலை: 4 மணி சத்யநாராயண பூசையும் அம்மன் அபிஷேகமும்
அந்நாளைக் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் கழித்தோம் என்பது அந்நாளை விவரிக்கும் ஒரு வழி. அறிவித்திருந்ததைக் கண்ட, ஐயரும் எங்களிடம் சொன்ன, காலை 7:30 ராமர் அபிஷேகத்திற்காக முன்னதாகவே அங்கே இருந்தோம். புரட்டாசிச் சனி அல்லவா, அவருடைய இருப்பைக் குறிக்க வேண்டும். அனுமனுடன் சேர்த்து நான்கு சிலைகளும் பேரழகு: நுட்பமான முக அமைப்பு; ஏந்தியுள்ள விற்களின் வளைவுகள், உருவங்களின் அரசகளையான நிலைகளுடனும் அம்புகளின் நேர்மையுடனும் நெகிழும் கோடுகளில் பொருந்துகின்றன. அவர்களை நீராட்டும்போது ஐயர் ஏறத்தாழ விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் ஓதுகிறார்; பூசை நிறைவுக்கு முன்னர், பெரும்பாலோர் செய்வது போல முதல், கடைசிப் பாடல்களை மட்டும் அல்ல, மந்திர புஷ்பத்தின் ஒவ்வொரு பாடலின் முதல் வரியையும் சொல்லும், நாங்கள் அறிந்த ஒரே அர்ச்சகர் அவர். அவசரமில்லாத, ஆனால் விரைவான நிகழ்வு. காலையின் உபயகாரர்கள், வேறு சில பக்தர்கள், நாங்கள் தவிர அதிகம் யாருமில்லை. பிரசாதம் எளிய சர்க்கரைப் பொங்கல், (சுவையான) அவல் உப்புமா, பஞ்சாமிர்தம். என் அருகிலுள்ள பெண்மணி, “அது அவல் உப்புமா,” என்கிறார். எனக்குத் தெரியும் என்பதால் தலையசைக்கிறேன். “ஓ, உங்களுக்குத் தெரியுமா?” என்கிறார். என் வாய் நிறைந்திருப்பதால் மீண்டும் தலையசைத்து, விழுங்கிய பின்: “நாங்களும் வீட்டில் செய்கிறோம்,” என்கிறேன், “ஆனால் கோயிலில் எப்போதும் சுவை அதிகம், எப்படி என்று தெரியவில்லை.” பெண்மணி சிரிக்கிறார். “அது வழிபாட்டின் பலன்,” என்கிறார். அம்மாயத்தை மறுக்க முடியாததால் மீண்டும் தலையசைக்கிறேன்.
அவர் இல்லாவிட்டால், ஒவ்வொரு பௌர்ணமியிலும் நடக்கும் மாலை 4 மணிச் சத்யநாராயண பூசைக்கு, குறிப்பாக இன்று நாங்கள் திரும்பியிருக்க மாட்டோம். ஆனால் “வாருங்கள்,” என்றார், எனவே வந்தோம். அதே பெண்மணி வரவில்லை; ஆனால் இக்கோயிலில் சந்திக்க இதற்குள் பழகிவிட்ட மற்றவர்கள் இருந்தார்கள். பெண்கள் எப்போதும் மிகவும் அன்பானவர்கள்; ஆண்கள் அவ்வளவு பேசுவதில்லை, ஆனால் விருந்தோம்பலில் குறைந்தவர்கள் அல்ல. பல முறை, பிரசாதம் பெறாமல் கோயிலை விட்டுச் செல்ல எங்களை அனுமதித்ததில்லை.
பூசை: ஒரு சிறிய விநாயகர் ஆவாகனம், தொடர்ந்து குட்டி மூர்த்திகள் என்று மட்டுமே விவரிக்கக்கூடியவற்றுக்கு விரைவான அபிஷேகம், பிறகு நவகிரக பூசை (கோயிலின் பின்புறத்தில் நவகிரகச் சன்னிதி உண்டு; ஆனால் பீடத்தை அடுத்த மேசையில், மலர்கள் நிறைந்த 9 தொன்னைகளின் கட்ட வரிசையில் கிரகங்களை ஆவாகனம் செய்கிறார்கள்). இது நடக்கும்போது (நாகரிகமான தாமதத்துடன்) நாங்கள் நுழைகிறோம்.
மற்றொரு முதிய பெண்மணி என் அருகே அமர்கிறார். அவர் தமனம், மரிக்கொழுந்து கொண்டுவந்திருக்கிறார். தவனத்தை விஷ்ணுவின் திருமேனியின்மேல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னே கொடுக்கிறார். “நேற்றிலிருந்து அது அவருக்கு விசேஷம்,” என்று வலியுறுத்துகிறார். “ஏன்?” என்று கேட்கிறேன், “வெள்ளிக்கிழமைப் பூசை என்பதாலா?” “இல்லை!” என்று நம்ப முடியாதவராகப் பதிலளிக்கிறார். “புரட்டாசி என்பதால், பௌர்ணமி…” அது அழகாக இருக்கிறது என்று நான் சொல்ல, கறாராகத் திருத்துகிறார். “அழகோ இல்லையோ, அது அவசியம்,” என்று; தமனோற்சவத்தின் மையக் கருத்துகள் இவ்வாறு, முக்கியமான, ஆனால் தங்கள் நங்கூரங்களை இழந்த, நிலைத்த வழக்கங்களாகத் தங்கியிருப்பது என்னை வியக்க வைக்கிறது.
பிறகு அர்ச்சகர், நான் முழுவதும் புரிந்துகொள்ளாத ஒரு முறையில், புருஷ சூக்தத்தையும் பிறகு அஷ்டோத்தரத்தையும் ஓதுகிறார். தொடர்ந்து சத்யநாராயண கதையின் ஐந்து அத்தியாயங்களின் வாசிப்பு. ஒவ்வொன்றின் பின்னும் ஐயர் நிறுத்தி, ஒரு தேங்காய் உடைக்கிறார்; சத்யநாராயண விரதப் பொடிப் பிரசாதம் (அருண் பின்னர் ‘பொடிபோன்ற சுவை’ என்று வருணிப்பது).
இக்கோயிலின் பூசைச் சடங்குகளில் அடிக்கடி பக்தர்களின் ஒரு குழு, பெரும்பாலும் பெண்கள், ஆனால் அவர்கள் மட்டும் அல்ல, முதன்மைச் சன்னிதியின் இருபுறமும் வரிசையாக அமர்ந்து பின்பற்றுகிறார்கள்; இரண்டு எவர்சில்வர் தட்டுகளுடன்: ஒன்றில் உதிரி மலர்கள் குவிந்து, மற்றொன்று மலர்களைக் குவிக்க. வழக்கமாக இளஞ்சிவப்பு அரளி, துளசி, சாமந்தி, சிறிய ரோஜாக்கள். அர்ச்சகர் ஓத ஓத, மலர்கள் ஒவ்வொன்றாக நகர்கின்றன. நாங்கள் சென்ற ஏறத்தாழ ஒவ்வொரு முறையும், இதுவே நிலையான வழக்கம்.
பயன்படுத்தாத மலர்கள் முன்னே ஒரு கூடையில். பெண்கள் பூசையில் சேர, தட்டுகளும் சில மலர்களும் அவர்களுக்குத் தரப்படுகின்றன. எல்லோரும் பயன்படுத்தும் கூடையை நிரப்பச் சிலர் மேலும் கொண்டுவருகிறார்கள். ஆனாலும் மிக வேகமாகச் செல்லக் கூடாது; நானோ தெளிவாகவே அவ்வாறு செய்கிறேன். சசிகலா சிரித்து என்னைக் கடிந்துகொண்டே, குறைந்துவரும் என் மலர்களைத் தன்னுடையவற்றால் நிரப்புகிறார். “மெல்லச் செல்லுங்கள்!” என்கிறார், “அஷ்டோத்தரம் இனிமேல்தான்!” இத்தருணத்தில் நான் இளையவராகிறேன்; தெளிவாகவே எனக்குத் தெரியாததால், கற்றுத்தரப்பட வேண்டியவராக. கைகளை எப்படி வைக்க வேண்டும், எந்த மடியில், ஒவ்வொரு கைப்பிடியிலும் சிறிது துளசியும் சிறிது அட்சதையும் இருக்கும்படி எப்படிச் செய்வது, பூசை முடிந்ததும் சமர்ப்பித்த மலர்களை என்ன செய்வது என்று பெண்கள் செய்து காட்டுகிறார்கள். திடீரென, இக்கூட்டுக் கற்பிப்பில், அர்ச்சகர் ஓதுவது கேட்காதபோதும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் ஒரு வேகம் வழிபாட்டிற்கு உண்டு என்பதை உணர்கிறேன். மலர்களின் நகர்வு, பக்கம் புரட்டுவது அல்லது தாளம் போடுவது; அங்குள்ள ஒவ்வொருவருக்கும் சேர்ந்துகொள்ளத் தெரிந்த ஒரு லயம் அது; வழக்கமான நாதஸ்வர, தாளவாத்தியக் குறிப்புகள் இல்லாதபோதும், தனக்கே உரிய ஒரு சந்தத்தை அது உருவாக்குகிறது.
பிரசாதத்திற்கு அமர்கிறோம்; உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல டப்பாக்களை வெளியே எடுக்கும் என் அருகிலுள்ள பெண்களிடம், டப்பாக்களை நினைவில் வைத்துக்கொள்ள எனக்கு ஒருபோதும் முடிவதில்லை என்று வேடிக்கையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இது இப்போது, மாலை 6:30 மணிக்கு, இரவு உணவு; சீக்கிரம் உண்பது நல்லது. “ஆமாம்!” என்கிறார் நீலப்பச்சை உடையிலுள்ள பெண், ஒரு வாய்பாட்டைத் திரும்பச் சொல்வது போல, “7க்கு முன்னர்!”
அர்ச்சகர் இப்போது அம்பாள் அபிஷேகத்திற்கு நகர வேண்டும் என்பதால் கோயிலில் இன்னும் பரபரப்பு; எல்லோரும் நேரத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் எங்கள் புதிய இணையதளத்தில் எப்படித் திரட்டத் திட்டமிடுகிறோம் என்பது பற்றி மனீஷுடனான அழைப்புக்கு நேரத்தில் வீடு சேரப் புறப்படுகிறோம்.
காலை, ராமர் அபிஷேகம்
காலையில் ராமர் காணக் காண மகத்தான காட்சி – உதிக்கும் சூரியனைப் போல ஒளிர்பவர். அவருக்கும் லட்சுமணனுக்கும், நீண்டு சுழலும், நேர்த்தியாக வடித்த காது அலங்காரங்கள்; தீபா தி குறிப்பிடுவது போல, அவை ஒரு கூந்தல் கற்றை போன்ற தோற்றத்தைத் தருகின்றன. அபிஷேகம் எளியது, ஆனால் தன்னளவில் முழுமையானது. வெளிப்படையான அவசரமோ குறுக்குவழியோ இல்லை.
மாலை, சத்யநாராயண பூசை
புஷ்பார்ச்சனையில் சேரும்படி எங்களைக் கேட்டு, ஒரு தட்டும் சில மலர்களும் தருகிறார்கள். தீபா திக்கு உடனே தருகிறார்கள்; ஆனால் எனக்கு – சட்டை-பேண்ட் அணிந்த ஒரு பையனுக்கு – தரலாமா என்று பெண்களுக்கு உறுதியில்லை, தீபா தியிடம் விளக்கம் கேட்கிறார்கள்!! நாங்கள் இருவரும் ஆம் என்ற பின், எனக்கும் அதையே தருகிறார்கள். பூசை ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது; மலர்களை ஒவ்வொன்றாக இடத் தொடங்குகிறேன். அர்ச்சனையின் லயம் உடனே தெளிவாகப் பிடிபடவில்லை – என்னால் காண முடிந்த கேட்கக்கூடிய அடையாளம் எதுவும் இல்லை; ஆனால் மண்டபத்தில் ஊடுருவிய ஒரு நுண்துடிப்பு மெல்லத் தெளிவாகியது.
பலமுறை நாங்கள் கண்ட, குருக்கள்மார் மலர் தூவும் காட்சி இப்போது என் மனதில் மிதந்தது; அதை மீண்டும் செய்ய முயன்றேன். மணிக்கட்டு, விரல்களின் சுண்டல்களுக்கு இடையே ஒரு சமநிலையைக் காண முயலும், பரிசோதனை மலர்த் தூவல்களின் ஒரு வரிசை இதனால் தொடங்கியது. சில மலர்கள் என் மடியிலேயே மீண்டும் விழுந்தன, சில தட்டைக் கடந்து பறந்தன. இறுதியில்: கட்டைவிரல்-நடுவிரல்-மோதிரவிரலால் மலரைக் காம்பில் பிடித்து, முன்கை இனித் திரும்ப முடியாது என்னும் வரை மணிக்கட்டால் அசைவை நடத்தி, அதே நேரத்தில் உள்ளங்கையை மேல்நோக்கித் திருப்பி, அதற்கு மேல் திருகினால் மணிக்கட்டு வலிக்கும் கடைசிக் கணத்தில் விரல்களால் சுண்டி – முற்றிலும் சரியான தூவல்களுள் தூவலைக் கண்டுகொண்டேன். அடடா, அது உண்மையிலேயே ஒரு தூவல் போல உணர்த்தியது. இத்தூவலுடன், எழுந்த எண்ணங்களை – நல்லவை, அல்லவை இரண்டையும் – தருதல், சரணடைதல், சமர்ப்பித்தல் என்ற குவிந்த உணர்வும் இணைந்து, அர்ச்சனை முழுவதற்கும் ‘முறையான செயல்’ என்ற மிக நெருக்கமான உணர்வைத் தந்தது. அங்கே நிகழ்த்தப்படுவது மெய்யான மதிப்புடையது, தன் உரிய இடத்தில் உள்ளது என்ற உணர்வை.
என் பங்கு முழு நேரமும் நீடிக்க, துளசிக் காம்புகளிலிருந்து தனித்தனி இலைகளைப் பறித்துத் தூவிக்கொண்டிருந்தேன்.
பீடத்தில் அலங்கார மலர்கள் மூடிய சிறிய நாராயணர் உருவங்களை (இரண்டு: ஒன்று தட்டையானது, ஒன்று முப்பரிமாணமானது) நான் கவனித்திருக்கவே இல்லை.
வெண்பலகையிலிருந்து: புரட்டாசி 2-ம் சனிக்கிழமை காலை சீதா ராமருக்கு அபிஷேகம்
காலை 7.30 மணிக்கு தீபாராதனை
மாலை 4 மணிக்கு ஸ்ரீ சத்ய நாராயண பூசை, தீபாராதனை
மாலை 6.30 மணிக்கு பௌர்ணமி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை




