சிறுத்தொண்ட பக்த சபை நடத்தும் இத்திருவிழா, காரைக்கால் அம்மையாருக்குரியது. வேதபுரீஸ்வரர் கோயிலில், ஒரு தேரின் மேற்பகுதி முழுவதையும் மாம்பழங்களால் செய்கிறார்கள்; சாத்தியமான ஒவ்வோர் இடத்திலும் மாம்பழங்களை (வருந்தத்தக்க பிளாஸ்டிக் உறைகளில்) தொங்கவிடுகிறார்கள் அல்லது கட்டுகிறார்கள். இதற்கிடையில், காரைக்கால் அம்மையாருக்கும் அவருடைய உற்சவ உருவத்திற்கும் அபிஷேகம்; நாயன்மார் சன்னிதிக்கு வெளியே பெண்களின் ஒரு பெரிய குழு அவருடைய பாடல்களைப் பாடுகிறது. வருந்தத்தக்க வகையில் பாட்டில் சுருதி அதிகம் சேரவில்லை; லலிதாம்மா ஒலிவாங்கியை எடுக்கும் சிறிது நேரத்தில் வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் சிறு நூல்களுள் ஒன்றை வாங்கி, கோப்புகளுக்காக PDF ஆக்குகிறேன். இதற்கிடையில் அம்மையாருக்கு மலர் மாலைகளும் மனோரஞ்சிதக் கிரீடமுமாக முழு அலங்காரம்: ஏறத்தாழ அவரைக் கவர்ச்சியாகத் தோன்றச் செய்கிறார்கள்; சிவனுக்குத் தன்னை அளிப்பதில், தன் அழகை வேண்டுமென்றே விட்டுப் பேயுருவை ஏற்ற ஒரு பெண், இப்பிற்காலத்து மறுமாற்றத்தைப் பற்றி என்ன சொல்வார் என்று வியக்கிறேன்.
அலங்கரித்த உற்சவ மூர்த்தியை மாம்பழத் தேருக்குக் கொண்டுவரும்போது ஒரே தள்ளுமுள்ளு: முதன்முறையாக ஓர் அர்ச்சகர், “இந்நிகழ்வு முழுவதும் புகைப்படம் எடுப்பது பற்றியதே, பக்தியுடன் அம்மையாரைக் காண்பது பற்றியது அல்ல!” என்று சொல்லக் கேட்கிறேன். கேமராக்களும் கைபேசிகளும் கொண்ட எல்லோருக்கும் இடையிலும் பின்னாலும், அவர்களின் திரைகள் வழியே தவிர, எங்களால் அரிதாகவே காண முடிகிறது.
மாங்கனித் தேர் பிரகாரத்தை மூன்று முறை சுற்றுகிறது; அது ஓர் அரிய காட்சி. அர்ச்சகர்களும் பக்தர்களும் சுட்டுக்கொள்ளாமல் நடக்க, நண்பகல் வெயிலில் கல் சூடான இடங்களில் நீர் ஊற்றச் சிலர் ஏற்பாடு செய்துள்ளார்கள். திரும்பும் முன்னர், மாங்கனித் தேர் சிவன், அம்பாள் சன்னிதிகளில் சற்று நேரம் நிற்கிறது. மாலையில் வெகு நேரம் கழித்து நாங்கள் திரும்பும்போது, அவர் இன்னும் அங்கே தேரில், தனியாக, கவனிப்பாரின்றி. அப்போது அவருடன் எங்கள் தனித்த தருணங்கள் கிடைக்கின்றன.
மற்றக் கோயில்களில், (உணவு இரந்து வந்து, அவருடைய மாம்பழங்களுள் ஒன்றைப் பெறும்) பிட்சாடனராகச் சிவனைப் பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்களாம். பக்தர்கள் தங்கள் கூரைகளில் கூடி, கூட்டம் பிடிக்க, கீழே வீதிகளில் மாங்கனிகளை எறிகிறார்கள். இம்மாம்பழங்களைப் பிடிப்பது தெய்வ ஆசிகளைக் கொண்டுவந்து, விருப்பங்களை நிறைவேற்றும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இங்கே புறப்பாடு உள்ளேயே, எனவே அத்தகைய எறிதல் நடப்பதில்லை, நல்லவேளை!




