காலை 9:30 அளவில் கௌசிக துளசி மாரியம்மனிடம் செல்கிறோம். த்வஜம் இன்னும் மேலே உள்ளது. 10:30 அளவில் திரும்பி வரும்படி சொல்கிறார்கள். நேற்றிரவு திருத்தேர் என்பதையும் அறிகிறோம்: தேர் எல்லா அலங்காரங்களுடனும் இன்னும் வெளியே உள்ளது. அலங்காரங்களுள் நட்சத்திரப் பழ மாலைகளும்!
வீட்டிற்குச் சென்று 10:40 அளவில் திரும்புகிறோம்: த்வஜம் ஏற்கெனவே இறங்கிவிட்டது!! சிட்டிகை சிட்டிகையாகக் குங்குமமும் விபூதியும் பெற்றுக்கொண்டு, உள்ளே மேலும் சற்று நேரம் கழிக்கிறோம். உட்பிரகாரச் சுவர்களின் உருவங்களைக் குரல் குறிப்பாகப் பதிவு செய்தோம்.
மாலையில் 8 மணி அளவில் அருண் மீண்டும் செல்கிறார். ஊஞ்சல் ஏற்கெனவே அமைத்தாயிற்று. 8:30 அளவில் தீபாராதனை: மிகச் சுருக்கமானது, ஓரிரு நிமிடங்களில் முடிகிறது. தெற்கு நோக்கிய ஊஞ்சலின் முன் நிற்க இடம் உண்டாக்க, முருகன் சன்னிதிக்கு வெளியேயுள்ள வழக்கமான பிரிப்புத் தடுப்பை அகற்றியுள்ளார்கள். ஊஞ்சலின் இருபுறமும் ஒரு சேவல் விளக்கும் ஒரு மயில் விளக்கும். அம்மனின் இடப்புறத்தில், நிலையான ஒரு முக்காலியில், பாவாடைராயன் நிற்கிறார். தாமரைகள், மலர் மாலைகள், ஒரு கிராம்பு மாலை ஆகியவற்றால் அம்மன் அழகாக அணிசெய்யப்பட்டுள்ளார்.
கௌஸ் உரிமையாளர்களிடம் நான் ஏற்கெனவே கேட்டிருந்தும், புகைப்படமோ காணொளியோ எடுக்கப் பூசாரி என்னை அனுமதிக்க மறுக்கிறார். இறுதியில் கௌஸின் மூத்த மகன் (அவர்தான் என்று நினைக்கிறேன்) பூசாரியைச் சம்மதிக்க வைத்தார்; அவர் மீண்டும் என்னிடம் வரவில்லை. நான் கௌஸின் மகனிடம் சென்று, ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டு, தலையிட்டதற்கு நன்றி சொன்னேன்.
அருகில் வாழும் ஒருவரைச் சந்தித்தேன். நேற்றிரவு நாங்கள் தவறவிட்டது நிறையவாம். திருத்தேர் ஒரு பெரிய நிகழ்வு. தன் காணொளிப் பதிவை என்னுடன் பகிர்ந்துள்ளார் (ஒரு கைபேசிக்கு வியக்கத்தக்க தரம்).
சுண்டல் பிரசாதம் உண்டு.
திரும்பும் வழியில், மகாத்மா காந்தி சாலையில் ஒரு தேர் நிற்பதைக் காண்கிறேன். அது கோவிந்தசாலை முதன்மைச் சாலையிலுள்ள (ராஜா திரையரங்கின் பின்னே என்கிறார் அங்குள்ள ஒருவர்) மாரியம்மன் கோயிலிலிருந்து வருகிறது. திருவிழாவின் இறுதிக்கு முந்தைய நாள் இது.




