இந்த உற்சவத்தின் நிறைவு என்பதால், இன்று மங்களாசாசனம், திருமஞ்சனம், பெருமாள்-ராமானுஜர் உள் புறப்பாடு.
காலை 9 மணிக்கு ராமானுஜரை வெளியே கொண்டுவருகிறார்கள். எல்லோருக்கும் தரும் பிரசாதம், முந்திரியும் உலர் திராட்சையும் கலந்த மெல்லிய வெல்லத் துகள்கள். ராமானுஜர் ஒரு சுற்று உள் புறப்பாடு செய்து, மூலஸ்தானச் சன்னிதிக்குள் நுழைகிறார். கருவறைக் கதவு மூடுகிறது. (முதலில் நட்பாக இருந்த பாதுகாவலர், நான் (அருண்) புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது நிறையச் சத்தம் போட்டார்.)
காலை 10:30 அளவில் திருமஞ்சனம் தொடங்குகிறது.
உட்பிரகார வாசல் பகுதியில் அமர்ந்திருக்கும் உபயகாரர் குடும்பத்திற்கான சங்கல்பத்துடன் தொடங்குகிறது. அர்ச்சகர்கள் மணி அடிக்கும்போது, நாங்கள் எல்லோரும் அமர்ந்திருக்கும் மகா மண்டபத்தில், வெளியே, நாதஸ்வரம் தொடங்குகிறது. பட்டாச்சாரியார் தட்டு விளக்கை ஏற்றுகிறார், முறை தொடங்குகிறது: பால், தயிர், பழங்கள், தேன், இளநீர் …
சாம்பிராணி நிறையப் புகை எழுப்பி, உள்ளே திருமஞ்சனத்திற்காக முற்றிலும் ஆடையின்றி இருக்கும் மூலப் பெருமாளை மறைக்கிறது. பெருமாளின் முன்னே துணைவியருடன் அவருடைய உற்சவ மூர்த்தி (ஓரளவு ஆடையுடன்). அதன் முன்னே பக்கத்தில், தெற்கு நோக்கி, ராமானுஜர்.
ஒவ்வொரு முறையும் அர்ச்சகர் எல்லா உருவங்களுக்கும் தூபம், ஆரத்தித் தீபம், பிறகு தட்டுத் தீபம் காட்டுகிறார். ஒவ்வோர் அபிஷேகக் கட்டத்திற்கும் இடையே தெய்வங்களை நீரால் கழுவுகிறார்கள். பெருமாள் உற்சவ மூர்த்திக்கு முதலில் துளசி மாலை, பிறகு மலர் மாலை. அவ்வளவு வளமான, தீவிரமான காட்சி. புகையின் ஊடே தெரியும் தீபங்களின், ஆராதனைகளின் சுடர்கள், தெய்வங்களை ஓரளவு ஒளிரச் செய்வது, ஏதோ மறைபொருளான கனவு போல, உங்களுக்குள் உள்ள பகுதிகளின்மீது ஒளி வீசுகிறது. அபிஷேகம் செய்வோருடன் கருவறைக்குள் இருக்க முடியாதது மிகவும் பாவமாக இருந்தது! சற்று நேரம் பிரபந்தம் ஓதுகிறார்கள்.
இறுதியில் திரை இழுக்கப்படுகிறது, நாங்கள் எழுந்து நிற்கிறோம்; அது மீண்டும் திறக்கும்போது, இம்முறை கலசத்திலிருந்து மற்றொரு நீர் வார்ப்பு (முன்னர் அது எங்கே வைத்திருந்தது? எப்போது தயாரித்தது?), ஆனால் ஒரு சிறப்பு வெள்ளிக் கருவியால், கலசத் தீர்த்தம் பொழிவாக வருமாறு செய்த ஒரு தட்டின்மேல் [சகஸ்ர தாரை/ வெள்ளி ஜல்லடை]. கலசத் தீர்த்தம் முதலில் முதன்மைத் தெய்வத்திற்கு, பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு, ராமானுஜருடன் நிறைவு.
இனி அலங்காரத்திற்கு ஒரு மணி நேரமாகும் என்கிறார் சேகர் மாமா; அப்போது மற்றோர் ஆராதனையும் பிரசாதம் வழங்குதலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மாலைப் புறப்பாடு இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது: ஏப்ரல் 22 மிக முக்கியமான நாள், பெருமாளும் ராமானுஜரும் ஒன்றாக ஊர்வலம் செல்வது, “எதிர் சேவை” (ராமானுஜர் எப்போதும் பெருமாளை நோக்கியே, அவர் முன்னே செல்லும்போது பின்னோக்கிச் செல்கிறார்). அது தொடங்கும்போது ஏறத்தாழ இரவு 8.
நாளை புனர்பூச நட்சத்திரம் [புனர் பருவம்/ புனர்பூசம் அல்லது புனர்வசு]: ராமரின் பிறந்த நட்சத்திரம்; எனவே அது அபிஷேகத்துடனும் உள் புறப்பாட்டுடனும் அனுசரிக்கப்படுகிறது: ஆனால் அபிஷேகப் பகுதி இன்னும் உறுதியாகவில்லை என்றார் பிரசன்னா.




