சில தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பின், மனோன்மணி கோயிலின் ஐயரை இன்று சந்தித்தோம். மணக்குள விநாயகர் கோயிலில் இருந்த ஒரு பெண்மணியும் அங்கே இருந்தார்; அங்குள்ள முருகன் சன்னிதி சாஸ்திரிகளுடன் நான் பேசியதிலிருந்து என்னை அடையாளம் கண்டார். கோயில்களிடையே நிகழும் இத்தகைய பல சந்திப்புகளுள் இது முதலாவதாக இருக்கும். சிலர் வந்து நின்று செல்கிறார்கள், “வெள்ளிக்கிழமை என்பதால்” என்கிறார் அர்ச்சகர்; அவர்களுள் பா.ஜ.க. சின்னம் அணிந்து வெள்ளை உடையில், 2 உதவியாளர்களுடன் காரிலிருந்து இறங்கும் பருத்த மனிதர் ஒருவர். நகரில் எங்கோ துணிக்கடை வைத்திருப்பதாகச் சொன்னார் என்று நினைக்கிறேன்.
நாங்கள் விரைவில் அறியவிருப்பது போல, சிரமப்படும் அர்ச்சகர்களின் ஒரு பிரிவு உண்டு; அவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் அல்லது முன்னாள் கீழ்நிலை நிறுவனப் பணியாளர்கள்; தங்கள் உள்ளூர் நிகழ்வுகளிலும் பணியிடச் சன்னிதிகளிலும் பூசைகளோ அர்ச்சகப் பணியோ செய்திருக்கலாம். பேருந்து நடத்துநர் போன்ற பல வேலைகளை அவர்கள் உபரியாகச் செய்கிறார்கள். உள்ளூர்ச் சன்னிதிகளை அவர்கள் கவனித்துக்கொள்வது கூடுதல் வருமானமும், பரம்பரைத் தொழிலின் தொடர்ச்சியும் ஆகும். அவர்கள் பாடசாலைகளில் முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. யூடியூப் காணொளிகளைப் பார்த்தே அடிப்படை அலங்காரத்தையும் ஆராதனைகளையும் செய்யக் கற்கலாம் என்று ஓர் ஐயர் ஒருமுறை எங்களிடம் சொன்னார்.
மனோன்மணி தெருக்கோயிலை நடத்துவது, நேர் எதிரே உள்ள கட்டடத்தில் வாழும் ஒரு குடும்பம் (முதலில் மாஹேயைச் சேர்ந்த மலையாளிகள், நெடுங்காலமாக இங்கே குடியேறியவர்கள்); அண்மையில், நாங்கள் எங்கள் விசாரணைகளுடன் வருவதற்குச் சற்று முன்னர், அக்குடும்பம் ஒரு மகனை, இக்கோயிலைக் கவனித்து வந்தவரை, மாரடைப்பால் இழந்துள்ளது. அவரும் அரசு ஊழியராக இருந்தவர். அவருடைய தாய் எங்களிடம் பேசி, கோயிலின் கதையைச் சொல்கிறார்.
மனோன்மணி அம்மன், வைத்திக்குப்பத்தில் பாப்பம்மாள் கோயில் வீதியிலுள்ள செங்கழுநீர் அம்மன் கோயில் குளத்திலிருந்து வந்தவர் என்கிறார் அவர். முதலில் அங்கே எப்படி இருந்தார் என்று தெரியாது. அருகே வாழ்ந்த ஒரு செட்டியார் (அம்பலத்தடையார் மடம் வீதியின் கீழ்ப்புறத்தைச் சுட்டினார்) அதைக் கொண்டுவந்து வழிபட்டார்; ஆனால் பிறகு நிறுத்திவிட்டு (தனிப்பட்ட சிரமங்களா?), அருகிலுள்ள ஒரு தச்சரின் வீட்டுக் கிணற்றில் இட்டுவிட்டார் (அதே திசையில்தான்); புனித உருவங்களையும் வடிவங்களையும் கவனிப்பாரின்றியோ வேறெங்குமோ விட்டுவிடாமல் நீர்நிலைகளில் விடுவதே வழக்கம்.
கிணற்றிலிருந்து மூர்த்தி மீண்டும் வெளிப்பட்டபோதுதான், அவருடைய தாத்தாவின் சகோதரர் அதை எடுத்து, தம் வீட்டை ஒட்டிய ஒரு சிறிய இடத்தில் (இப்போது கோயில் உள்ள இடத்தில்) நிறுவி, அதற்குப் பூசைகளைத் தொடங்கினார். எனவே இக்கோயில் 3 தலைமுறைப் பழமையானது, சிலர் சொல்லி வருவது போல 100 ஆண்டுகளுக்கும் மேலானது அல்ல என்று இதிலிருந்து அறிகிறோம். மணக்குள விநாயகர் கோயிலில் வல்லவராகவும், அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்த ஒரு குருக்களின் உதவியுடன் 2 கும்பாபிஷேகங்கள் நடந்துள்ளன. (அவர், இங்கே பூசை செய்யும் ஐயரின் பள்ளித் தோழரும்கூட என்று தெரியவருகிறது, ஆனால் அவர்கள் நெடுங்காலமாகத் தொடர்பை இழந்துவிட்டார்கள்).
மகன் இல்லாத நிலையில் தன் மரபுகளை எப்படித் தொடர்வது என்று கோயில் இப்போது வழி தேடுகிறது. இடைவெளிகளை நிரப்ப ஐயர்களை அழைத்துள்ளார்கள்; ஆனால் தந்தையின் இடத்தை ஏற்பவர் பேரனே. தானும் தன் தந்தையும் செய்த அம்மன் அலங்காரங்களின் புகைப்படங்களை அவர் எங்களுக்குக் காட்டுகிறார். இப்போது தன் படிப்புக்கும் தேர்வுகளுக்கும் இடையே, தாயின் வழிகாட்டுதலுடன், தொடர்கிறார். அச்சிறுவர் செய்யவிருக்கும் வெள்ளிக்கிழமை மாலை அலங்காரத்திற்குத் திரும்பி வரும்படி எங்களிடம் கேட்கிறார்கள்.

