மாலை 6:45 அளவில் செட்டிக் கோயிலில் இருக்கிறோம். ஊஞ்சல் உற்சவ ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. மற்ற நாட்களைவிட இது நிதானமான நிகழ்வு என்று சொல்லிக்கொள்கிறோம். சடங்கைவிட விழாத்தன்மையே அதிகம் எனத் தோன்றுகிறது. உற்சவ மூர்த்திகளை உள்ளே அலங்கரித்து, பிறகு வெளியே கொண்டுவந்து ஊஞ்சலுக்கு எடுத்துச் செல்கிறார்கள்: ஒன்றாகக் கட்டிய பல மரப் பலகைகளாலான தற்காலிக அமைப்பு அது. எல்லா மூர்த்திகளையும் முறையாக வைத்தாயிற்று, ஆனால் விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்கும் ஊஞ்சலில் இடமில்லை என்று தெரிகிறது. மேலும் தற்காலிகத் தீர்வுகள் தொடர்கின்றன: தனித்த இருவருக்கும் இடமளிக்க, இப்பலகைகளின் முன்னே இரண்டு சிறு முக்காலிகளைக் கட்டுகிறார்கள்.
இம்மாற்றம் விழாவைக் கணிசமாகத் தாமதப்படுத்துகிறது. ஆனால் அத்தாமதம் உங்கள் உற்சாகத்தைக் குறைக்க நாதஸ்வரக் குழு விடுவதில்லை!
அங்குள்ள வரதராஜப் பெருமாள் சன்னிதிக்கும் சென்றோம். பக்கச் சன்னிதியில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும் பழங்களும் சாத்தியிருப்பதைக் கவனித்தோம்!
ஊஞ்சல் ஆட்டம் தொடங்கியது. சூழல் ஒரு திருமண வரவேற்பினுடையது. தெய்வங்களை வெளியே கொண்டுவந்து அமர்த்தி, ஆட்டி ஆட்டி ஆட்ட, நாதஸ்வரக் குழு ஒரு கச்சேரி வாசிக்கிறது; மற்ற நேரங்களில் ஆராதனையுடன் வர வேண்டிய உச்சங்களின் இடையூறு இன்றி. பிரபலமான கிருதிகளின் தொகுப்பை வாசித்ததாகத் தோன்றியது, பெரிய புதுமை எதுவும் இல்லை. அர்ச்சகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு நின்றார்கள்: அவர்கள் வேலை முடிந்துவிட்டது போலவும், சற்றுச் சாய்ந்து அமர்ந்து மதிப்புப் பெற இவ்விழா அவர்களை அனுமதித்தது போலவும். சற்று நேரம் பார்த்துவிட்டுப் புறப்படுகிறோம்.




