இறுதியாக, காமதேவனுக்கு ஒரு கோயிலா?

உண்மையில் இல்லை; ஏனெனில் இது, அவருக்கு நேரெதிர்த் துருவமாகக் கருதக்கூடிய ஒரு தெய்வத்திற்கு, துறவுக் கோலத்துப் பழனி ஆண்டவருக்கு உரியது. ஆனால் நான் (தீபா) புதுச்சேரிக் கோயில்களைப் பற்றிய சி.எஸ். முருகேசனின் நூலில், காமதேவனுக்கு ஒரு கோயில் கட்டப்படுவதைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன் – வீரபத்திர சுவாமி கோயில் அலகு சேவையின்போது லாஸ்பேட்டையில் நாங்கள் கண்ட காமன் கோயில் வீதியில் அல்ல (ஆம், முருகேசன் இவ்விவரத்தைக் குறிப்பிடுகிறார்), முத்தியால்பேட்டையில். நூலில், ஏறத்தாழக் கோயிலே இல்லாத ஒரு தெய்வத்திற்கு – கதைகளும் பாடல்களுமாக – 60 பக்கப் பகுதி உண்டு. அப்படியானால், காமனுக்கான கதைகளை எங்கே காண்கிறோம், எங்கே பாடுகிறோம்?

எங்கள் தேடல்களில் மனீஷையும் இழுத்துக்கொண்டு, இக்கோயிலைத் தேடிச் சென்றோம். இக்கோயிலின் சிற்பிக்கு ஒரு கனவு வந்ததாம்: இது காமனுக்கு அல்ல, பழனி ஆண்டவருக்கான கோயிலாக இருக்க வேண்டும் என்று உணர்த்தியதாம்; எனவே காமனும் (மன்மதனாக) ரதியும் சன்னிதியின் முன்னேயும் பின்னேயும் சுதை உருவங்கள். உத்திர நட்சத்திர நாளுக்கு (அருணின் பிறந்த நட்சத்திரம்!) முன்தினம் நாங்கள் செல்ல நேர்கிறது; அந்நாளில், திருமணம் செய்யவோ துணை தேடவோ விரும்புவோர், அல்லது காதல் துயரம் தொடர்பான எதற்காகவும் என்று நினைக்கிறேன், வந்து, மூன்று மாலைகளைச் சமர்ப்பிக்கிறார்கள் (ஒன்று காமதேவனுக்கு, ஒன்று ரதிக்கு, ஒன்று தங்களுக்கு; அதை ஒரு மாதம் கழித்துத் திரும்பக் கொண்டுவர வேண்டும்). மறுநாள் இதற்குத் திரும்பி வர நினைக்கிறோம், ஆனால் வர முடியவில்லை.

கோயிலின் முக்கியத் திருவிழா பங்குனி உத்திர நேரம்; அப்போது பழனி ஆண்டவர் உற்சவர் மன்மதனாக வெளிவந்து ரதியை மணக்கிறார் (என்று நினைக்கிறேன்; அல்லது பங்குனி உத்திரம் என்பதால் அது முருகர் கல்யாணமா?).

இனிய சிறு தோட்டமுள்ள ஒரு முத்தாலம்மன் கோயிலுக்குள்ளும் உலவிச் சென்றோம்; அங்கே, அருகே யாருமின்றி, யாரும் தொடாமலே, அவருடைய திரிசூலம் ஆடிக்கொண்டிருந்ததாகத் தோன்றியது (மனீஷ், உலகின் ஏற்ற இறக்கங்களிலிருந்து நம்மைத் தனிமைப்படுத்துவதை, ‘தான்’ என்பதன் ஒரு வேறு வரையறையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்; எங்களுடையதோ, புறம்பானவை எனத் தோன்றும் காரணங்களுடன் ஆழமாகப் பின்னியது – ஆடும் திரிசூலம் என்னைப் பற்றி எதை முன்னுணர்த்துகிறது)