இங்கே சற்றுச் சாகசம். பிரதோஷத்திற்காக லாஸ்பேட்டை முருகன் கோயிலில் இறக்கிவிடச் சொன்னேன். துர்க்கா மண்டலியைச் (100 உறுப்பினர்கள் அளவில் என்றார் ரமணன் குருக்கள்) சேர்ந்த பெண்கள் குழு அங்கே சங்கல்பம் எடுத்துக்கொண்டிருந்தது. அபிஷேகங்களுக்கான விளக்குகளும் பிற திரவியங்களும் தயாராகிக்கொண்டிருந்தன; பெரும்பாலும் இளஞ்சிவப்புக் குர்தா அணிந்த ஓர் இளம்பெண் செய்தார். (ஓரளவு) பெரிய கோயிலில் ஒரு பெண் அவ்வேலையைச் செய்வதை நான் ஒருபோதும் கண்டிராததால் கவனித்தேன். உற்சவர் சிவன் சன்னிதியில் இருந்தார்; அந்தப் பிரதோஷ மூர்த்தி அழகானவர்; எனவே படமெடுக்கச் சென்றேன்; அபிஷேகம் தொடங்கும்போது அவரைக் காணவே முடியாது என்று நன்கு தெரியும். பிறகு ரமணன் குருக்களுடன் விளக்குகளைப் பற்றிச் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனக்குத் தந்த பெயர்கள் இதோ:
- மகா தீபம் அடுக்கு ஆரத்தி என்றும் அழைக்கப்படுகிறது. 5, 7, 9, 11 முதலிய திரியிடங்களின் அடுக்குகள் உண்டு. அலங்கார தீபம் என்றும் அழைக்கப்படுகிறது.
- திரிகளின் எண்ணிக்கையால் பெயர்பெற்ற தீபங்களும் உண்டு: ஒத்த தீபம், ரெட்ட தீபம், மூன்று தீபம் முதலியவை.
- பிறகு, முன்னே குறிப்பிட்ட உருவங்களோ வாகனங்களோ உள்ளவை: ரிஷப தீபம் (முன்னே விருஷபத்துடன்), புருஷ தீபம், நாக தீபம், மயூர தீபம், சேவல் தீபம். வெவ்வேறு கோயில் மரபுகளில் சிம்ம தீபமும் கஜ தீபமும் இருக்கலாம்.
- தட்டுத் தீபங்கள் பஞ்ச தட்டு எனப்படுகின்றன.
தீபாராதனையில் அலங்காரத்தின் ஓர் அம்சம் உண்டு என்று ரமணன் குருக்கள் உணர்த்துவதாகத் தோன்றியது; ஆனால் அவர் சொன்னதை நன்கு புரிந்துகொண்டேனா என்று தெரியவில்லை. தீபாராதனை வழக்கமாக ஒரு உபசாரம், அலங்காரத்தின் வடிவம் அல்ல.
பூசை தொடங்குவதற்கு முன்னர், ராகவன் ஐயர் (முதன்மை அர்ச்சகரின் மகன்) வந்து எங்கள் புகைப்படங்களைப் பற்றிக் கேட்கிறார்: சுருக்கமாக, நாங்கள் ஏன் இங்கே இருக்கிறோம் என்று அவர் இதற்கு முன்னர் ஒருபோதும் கேட்டதில்லை, அவர் தந்தைக்கு எப்போதும் தெரியும்; ஆனால் இப்போது, கோயில் திருட்டுகள் நடப்பதால்/ நடந்திருப்பதால், நிர்வாகத்திலிருந்து ஒருவர் அழைத்து, நான் புகைப்படம் எடுப்பதைப் பற்றிக் கேட்டதாகச் சொல்கிறார். காத்திருந்து, சிறப்பு அலுவலர் திரு. செல்வராஜுடன் பேசுவதாக வாக்களிக்கிறேன். அருண் வந்து, பிரதோஷ அபிஷேகங்கள் முடிந்ததும், செல்வராஜ் சாரிடம் முறையாக அறிமுகம் செய்துகொள்ள, என் UHCL அட்டையை எடுத்துவர வீட்டிற்கு விரைகிறோம். பிரதோஷப் பூசை முடியும் வரை காத்திருந்து, அப்படியே செய்கிறோம். அவர் அன்பானவர். பணியை விளக்குகிறோம்; சில கேள்விகள் கேட்டு, பிறகு தொடரலாம் என்று ராகவன் ஐயரிடம் எங்கள் கண்முன்னேயே சொல்கிறார். அப்பாடா.
இன்று பல அபிஷேகங்கள்: அம்பாளுக்கும் ஒன்று; பிரதோஷ நாயகருடன், அவரவர் சன்னிதிக்கு வெளியேயுள்ள இரு நந்திகளுக்கும். சிவனின் நந்திக்கு வெள்ளிக் கவசம்; தங்கம் சிவனுக்கே உரியது. அம்பாளுக்குத் தங்கக் கவசத்தின் சில பகுதிகள், முழுவதும் அல்ல.
பிரதோஷம் எளிய, உணர்வுபூர்வமான நிகழ்வு. 3 சுற்று உள் புறப்பாடு: ஒன்று இசைக்கு, ஒன்று ஐயரின் சமஸ்கிருத ஓதலுக்கு, ஒன்று வந்திருக்கும் எல்லோரும் ஓதும் பெரியபுராணம், திருவாசகம், போற்றிக்கு. இவற்றின் எழுத்தை ஒருவர் வழங்க, மக்கள் சுற்றி நடந்துகொண்டே ஒன்றாக வாசிக்கிறார்கள்; எப்போதும் முழு ஒத்திசைவில் அல்ல, ஆனால் இனிய சூழலை உருவாக்குகிறது, ஐயமில்லை. தாள்களைப் படமெடுத்து PDF ஆக்கினேன்.
மூன்று பிரதட்சிணங்களும் முடிந்ததும், பிரதோஷ மூர்த்தி தென்மேற்கு மூலையில் நின்றார்; அங்கே வெங்கடேச குருக்கள் “வரவிருக்கும் நிகழ்வுகள்” பற்றிச் சுருக்கமாகப் பேசினார் – மக்களுக்கு அவ்வாறு தெரிவிப்பது எவ்வளவு நல்ல எண்ணம். பந்தக்கால் முகூர்த்தத்தைப் பற்றிப் பேசினார், ஆனால் எதற்காக என்று தெரியவில்லை (குறுக்கிடும் இரைச்சல் நிறைய); வரவிருக்கும் அன்னாபிஷேகத்தைப் பற்றியும், அதே நாளில் வரும் பௌர்ணமி கோமாதா பூசையைப் பற்றியும்; சிறப்பு அலங்காரத்திற்குக் காய்கறிகள் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார்; பாம்புகளைப் போல இருப்பதால் நீண்ட புடலங்காய்கள் உட்பட. (காய்கறி அலங்காரத்தில் சிவன்!)
பிரசாதம் சுண்டல், இனிப்புப் புட்டு, ஒரு கலந்த சாதம். ஒவ்வொரு பூசையிலும் தேவாரம், திருவாசகம் முதலியவை பாடும் தண்டபாணி சாருடன் சற்று நேரம் பேசுகிறோம். பின்புறத்திலுள்ள இரு முருகன் சன்னிதிகளிலும், இக்கோயிலின் முதல் மூல மூர்த்திகளாக இருந்த உருவங்கள் உள்ளன என்று சொல்கிறார். முதலில் வந்தவர் விநாயகர்: எனவே அவர் ஆதி விநாயகர்; பிறகு சிறிய முருகர், பிறகு மயிலின்மேல் அமர்ந்தவர் – ஆனால் மயிலம் மடாதிபதி வந்து, மூல மூர்த்தி அமர்ந்திருக்காமல், எல்லோருக்கும் ஆசி வழங்க நின்றிருக்க வேண்டும் என்றார். எனவே இப்போதைய முருகனை நிறுவினார்கள். தம் பக்தியைப் பற்றி விரிவாகப் பேசினார்: தம் பாதத்தில் வீக்கம் இருந்ததையும், நள்ளிரவில் கதவு முழுவதும் திறந்திருக்க, ஒரு முதியவர் வீட்டிற்குள் வந்து, தம் பாதத்தில் மூன்று முறை தட்டி, சரியாகிவிடும் என்று சொன்ன, கனவு போன்ற ஓர் அனுபவத்தையும். அப்படியே ஆனார். இதைப் போலப் பல “அதிசய”மான அனுபவங்கள்.
உற்சவ மூர்த்திகளைப் பற்றியும் பேசினார். கோயிலில் இருவர்: ஒருவர் திருக்கல்யாணத்திற்கு; மற்றவர் சம்ஹார மூர்த்தி மட்டுமே, சூரசம்ஹாரத்திற்கு மட்டும் இருப்பவர். இவையெல்லாம் காலகட்டத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் என்றார். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மக்கள், நாயன்மார்கள் வந்தது போல, வருகிறார்கள்; ஒவ்வொருவரும் உபதேசித்து, கற்பித்து, சரிசெய்து, மாற்றி, தொடர்ந்து, நிறுத்தி: கோயில்கள் இத்தாக்கங்கள் எல்லாவற்றின் தடங்களையும் தாங்குகின்றன.




