இது உண்மையில், பெரியாண்டவரைக் குலதெய்வமாகக் கொண்டோருக்கான சடங்காக, கோயில் வளாகத்தில் நடந்த ஒரு தனிப்பட்ட முடி காணிக்கை, காதணி விழா. “பதிவு” செய்வதற்காகவும், இத்தகைய பூசைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், ஞானவேல் சுவாமி எங்களை அங்கே வர அழைத்தார். கோயிலின் பின்புறத்துக் கல்வெட்டுகளையும் அவர் எங்களுக்குக் காட்டியிருக்கிறார் – அவர் பெயரே பல இடங்களில் வருகிறது. டீகே என்டர்பிரைசஸ் மற்றொரு பெரிய நன்கொடையாளர் – அவர்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் என்று ஞானவேல் சுவாமி சொல்கிறார்.
காது சரியாகக் கேட்காத பூசாரி, பெரியாண்டவரின் கோயிலுக்குள்-கோயிலை உருவாக்கவே குறிப்பாக அழைத்த “வல்லுநர்”. எல்லாத் தெய்வங்களையும் செம்மண்ணால் வடிக்கிறார்; அவை, நிற்பதற்குத் தட்டையான அடியுடன் கூடிய அரைக்கூம்பு வடிவங்களே. எவ்வடிவிலானாலும், லிங்கம். அவை நிற்கும் இடங்களைக் கோலக் கோடுகள் குறித்து, புனித வெளி முழுவதையும் வரையறுக்கின்றன. அது ஒரு தேவர் சபை. இவ்வரையறைக்கு வெளியே, தேவர் சபையை நோக்கி, முத்தாளராஜன் – மது அருந்தும், ரொட்டி உண்ணும், இறைச்சி உண்ணும் முத்தாளராஜன் [ஆனால் அது யார் என்று இன்னும் உறுதி செய்ய வேண்டும்]. வெளியே வலப்புறத்தில் புற்று/ பூத்தம்மன் – பெயருக்கேற்ப அவரும் புற்றின் வடிவிலேயே செய்யப்பட்டு, பின்னர் புடவை அணிவிக்கப்பட்டு, வேப்பிலையாலும் மல்லிகையாலும் அலங்கரிக்கப்படுகிறார். இடப்புறத்தில் விநாயகராக இருக்க வேண்டிய ஓர் உருவம்; ஆனால் நாங்கள் சந்திக்கும் ஒருவர் (எங்கள் நோக்கையும் பணியையும் அறிய ஆர்வமுள்ள ஒரு புகைப்படக் கலைஞர்), அவ்விடத்தில் ஒரு காலத்தில் கிராம/ நாட்டார் தெய்வம் ஒன்று இருந்தது, இப்போது அது கணபதியுடன் இணைந்து, அவருடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்று சொல்கிறார். அவர் திராவிட இயக்கத்தவரைப் போலவோ, பிரபலமான இந்துத் தெய்வங்களை மறுப்பவராகவோ ஒலிக்கவில்லை; இது, தொடர்புபடுத்தல்களைப் பற்றியும், ஒரு காலத்தில் நுண்மையான எண்ணங்களாகவும் கருத்துகளாகவும் இருந்து, தயங்கித் தயங்கி வெளிப்பட்டு, மெல்ல இவ்வாறு உறுதிப்பட்ட நுண்ணறிவுகளை இத்தகைய தொடர்புபடுத்தும் வழக்கங்கள் எப்படி உருப்பெறச் செய்துள்ளன என்பதைப் பற்றியும், என்னை மீண்டும் சிந்திக்க வைக்கிறது.
தேவர் சபைக்குள் காத்தவராயன்; முத்தாளராஜன் அவரை நோக்க வேண்டும். அவருடைய நான்கு மூலைகளில், எல்லை அல்லது திசை காக்கும் நான்கு உருவங்கள். வெகு பின்னே, காத்தவராயனின் காவலில், பெரியாண்டவர் – சிவபெருமான் – இச்சா சக்தியும் கிரியா சக்தியும் இருபுறமும் (என்றார் ஞானவேல் சுவாமி), அல்லது சபை அமைப்பின் வேறு விளக்கங்களைப் பின்பற்றினால், பிரம்மாவும் விஷ்ணுவும் (மும்மூர்த்திகள்). வெளியின் புறச் சட்டத்தை, இரட்டை, ஒற்றை என வெவ்வேறு எண்ணிக்கையிலான தொகுதிகளாக அமைத்த சிறிய உருவங்களின் வரிசை தாங்குகிறது. அவர்கள் நாயன்மார்கள், அல்லது இடத்தை ஒன்றாகத் தாங்கும், தெய்வமாக்கப்பட்ட, போற்றப்படும் பிறர் என்றார் ஞானவேல். சில கிராமப் பகுதிகளில், சுற்றிலும் 108 பிள்ளையார் இருக்க வேண்டும் என்பது கருத்து (அரைப் பூசை = 54; கால் பூசை = 27); ஒவ்வொன்றுக்கும் (உடைத்த 108 தேங்காய்களுடன்) ஒரு படையலும் ஒரு மாவிளக்கும் (மாவிளக்கு இன்றியமையாதது; இப்பூசைக்கும் பல செய்தார்கள்). அல்லது மற்றக் கூட்டங்கள்: அஷ்டதிக்பாலகர்கள் (8 திசைகளுக்கு), 7 ரிஷிகள், 5 லிங்கங்கள் - பஞ்ச பூதம், 4 வேதங்கள், 9 கிரகங்கள். 108 என்ற எண் முக்கியம்.
[சரஸ்வதி-வரலட்சுமி-அம்பிகை என்ற மூவரும் உண்டா?]
ஆனால் எல்லோரையும் ஏன் அழைக்கிறார்கள்? ஏன் பெரியாண்டவரை மட்டும் அல்ல? – ஏனெனில் ஒரு நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைக்கும்போது, அவரை மட்டும் அழைப்பதில்லை, குடும்பம் முழுவதையும் அழைக்கிறோம். மரபாகக் கிராமங்களில், உபயகாரர் பிச்சைக்காரரைப் போல – அரிசி, பருப்பு முதலிய – பிட்சை சேகரிக்கிறார். கிராமத்தை ஒன்றிணைக்கவும், பெரியாண்டவரை ஊர்த் தெய்வமாக, உலகின் இறைவனாக ஆக்கவும் பூசை நடக்கிறது.
ஒவ்வோர் உருவத்தின்மேலும் அரிசி மாவுக் கரைசலும், தொடர்ந்து மஞ்சள் கரைசலும் வார்க்கப்படுகின்றன. செலவைக் கருதிப் போலும், சந்தனம் வார்க்கப்படாமல் தெளிக்கப்படுகிறது. இது ஓர் அபிஷேகத்திற்கு இணையானது; ஆனால் இது மாசுகளை நீக்குவது அல்ல, மங்கலப் பொருள்களைச் சேர்ப்பது. பிறகு ஒவ்வோர் உருவத்திற்கும் குங்குமப் பொட்டுகள்: சிறிய உருவங்களுக்கு மேலிருந்து கீழாக மூன்று; திரிபுண்டரமும் குங்குமத்திலேயே. கோலமாவுக் கோடுகளை மஞ்சள் நூலால் மீண்டும் அமைக்கிறார்கள்; அது இப்போது தரைக்கு ஓரிரு அங்குலம் மேலே, கோயில் முழுவதன் வடிவைக் குறிக்கிறது [कौतुक என்றும் அழைக்கப்படுவது]. காத்தவராயன் நிற்கும் நடுவில், மண்டலம் போன்ற வடிவில் நூல் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும்படி செய்கிறார்கள்.
தெய்வ உருவங்களின் இன்னும் ஈரமான மண்ணில் செருகிய சிறிய வேப்பங்குச்சிகள், மலர் மாலைகளைத் தாங்கும் தற்காலிகத் தாங்கிகளாகின்றன. முன்னே வாழையிலைகள், வெற்றிலை, வாழைப்பழம், உணவு போன்ற ஒன்று: மேலே சிறிது பஞ்சாமிர்தம் ஊற்றிய தயிர் சாதம். வேப்பிலைகள். அரளி மாலைகள். மல்லிகை.
முழு ஏற்பாட்டிற்கும் மணிக்கணக்காகிறது; பூசைக்கோ சில நிமிடங்களே. அம்மன் கோயில் வழிபாட்டின் சடங்குப் பகுதிக்கு இவ்வளவு குறைந்த நேரமாவது சரியா? இக்கோயில்களை நடத்தும் சமூகங்கள் அசைவம் உண்பவை, இத்தகைய சன்னிதிகளில் அழைக்கப்படும் சக்திகளை அவர்களால் மட்டுமே தாங்க முடியும் – எனவே அவர்களின் சடங்கு முறைகள் பெருவழக்கான சைவக் கோயில்களிலிருந்து வேறுபடுவது முற்றிலும் சரியே என்று பின்னர் சந்தித்த ஒரு குருக்கள் எங்களிடம் சொன்னார்.
சிவனின் அக்கினி ரூபத்தை ஆவாகனம் செய்ய, ஒவ்வோர் உருவத்தின் முன்னும் கற்பூரம் வைக்கப்படுகிறது. கிராமங்களில் பலியும் இருந்திருக்கும் – ஒரு கோழி, ஓர் ஆடு, ஒரு பன்றி. ஆனால் நகரில் அவ்வழக்கம் நிறுத்தப்பட்டு நெடுங்காலமாகிறது.
எல்லாம் முடிந்த பின், மரபான காது குத்தல் நடக்கிறது; சின்னப் பையனுக்கு மிகுந்த வேதனை. கார்ட்டூன் காட்டி நீட்டிய கைபேசியும் உதவவில்லை. பூசை மிகக் குறுகியது – கற்பூரம் ஏற்றி, விநாயகரை வழிபட்டு, பிறகு பின்னேயுள்ள பெரியாண்டவரை (அவருடைய காலடியில், மல்லிகையுடன், மழித்த முடியில் சிறிது வைக்கப்பட்டது).




