இரண்டு அங்காளம்மன்களின் கதைகள்

புதுச்சேரி நகரில் சின்ன சுப்பராய வீதியிலுள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் சென்று, துணை ஆய்வாளர் விஜயகுமாரைச் சந்தித்தோம்; அமாவாசையன்று கூழ் ஊற்றும் வழக்கம் பத்ரகாளிக்கு முக்கியம் என்று அவர் சொன்னார். உற்சவ மூர்த்தி வெளியே இருந்தார்; முந்தைய இரவு (அமாவாசை) ஊஞ்சல் உற்சவம் நடந்திருந்தது. இதே போன்ற திருவிழாவிற்குப் பௌர்ணமியன்று மீண்டும் வரும்படி சொல்கிறார்கள்.

எங்களுக்குக் கூழ் தருகிறார்கள்; பிறகு பிரசாதம், கேரட், மாங்காய்த் துண்டுகளுடன் மிக நல்ல தயிர் சாதம். எப்படியோ அதையெல்லாம் எங்களுடன் சுமந்துகொண்டு சுற்றுகிறோம்.

தீப மேசையருகே இருக்கும் ஒரு பெண்ணுடன் சற்று நேரம் பேசுகிறேன்; அங்கே பாதியாக வெட்டிய சிறு பூசணிகள்; அவற்றில் நெய் நிரப்பியுள்ளதாக அவர் சொல்கிறார்; குங்குமம் பூசிய சிவப்புத் திரியுடன்: நூலைப் பயன்படுத்தியுள்ளார்கள், நன்கு உறிஞ்சப் பஞ்சாக இருக்க வேண்டும். ஏதேனும் வேண்டுபவர்கள் இவ்விளக்குகளை வைக்கிறார்கள்: ஒற்றைப்படையில் என்கிறார், ஆனால் நான் காண்பது இரட்டைப்படை மட்டுமே. 6 பூசணிகள், 2 தேங்காய்கள் (9 மூடிகளாக இருக்க வேண்டும் என்கிறார்), விளக்காக்கத் தலைகீழாக்கிய 2 எலுமிச்சைகள்.

முத்தியால்பேட்டை அங்காளம்மனில் கூட்டம் குறைவு. இங்கேயும் உற்சவ மூர்த்தி வெளியே இருக்கிறார், ஆனால் கம்பிகளின் பின்னே பூட்டி. அவருக்கும் முந்தைய இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்ததால், அவரும் அலங்காரத்தில் இருக்கிறார். இதைவிட அதிகக் கைகளுடைய ஒரு தெய்வத்தைக் கண்டதில்லை: ஒன்றைச் சுற்றி ஒன்றாக நான்கு அடுக்குகள்! விரியும் ஒவ்வோர் அடுக்கிலும் முந்தையதைவிட அதிகக் கைகள்!!

இரு கோயில்களிலும் “கல்கத்தா காளி” உருவங்கள் உள்ளன; பிரதிஷ்டை ‘கல்கத்தா முறையில்’ செய்யப்பட்டதால் இப்பெயர். ஆனால் அதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை; விளக்கம் எதுவும் தரப்படவில்லை.