வீட்டிற்கு இவ்வளவு அருகில் இக்கோயில் பகுதி இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கவில்லை. வெளியே ஒரு கல்வெட்டு உள்ளது; 1835இல் இச்சன்னிதியையும் இப்பகுதியையும் கோயிலுக்கு எழுதிவைத்த 5 செட்டியார்களின் பெயர்கள் அதில் உள்ளன. வேலியிட்ட கேணிக் குளத்தைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் மயில்கள் வாழ்கின்றன. உள்ளூர் ராஜாக்கள் (குறுநிலத் தலைவர்கள்?) இங்கேதான் தங்கள் குதிரைகளுக்கு லாடம் அடித்து, நீர் காட்டினார்கள். அதனால் கோயிலின் அம்மனுக்கு இப்பெயர் வந்தது: லாட சின்னம்மன்.
செட்டிக் கோயிலைச் சேர்ந்த கோவிந்தராஜன் யாதவர் சமூகத்தைச் சேர்ந்த பராமரிப்பாளர்; அவருடன் 2 பெண்களும் உள்ளனர்: சகோதரிகள் என்று நினைக்கிறேன், ஒருவரின் பெயர் சங்கமித்ரா. அவர்கள் பெருக்க வருகிறார்கள், ஆனால் நாள்தோறும் வெவ்வேறு நேரங்களில். கோயிலைத் திறக்க யாரேனும் எப்போது வருவார்கள் என்று அறிவதே இங்குள்ள மிகப் பெரிய சிக்கல். அவ்வழியே செல்வோரை வரவேற்கிறார்கள்; ஆனால் கூட்டத்தை ஈர்ப்பதில் இவ்விடம் அக்கறையற்றதாகத் தோன்றுகிறது.
தன் குடும்பத்திற்குப் பெரிய செட்டிக் கோயில் அருகே நிலம் இருந்ததையும், அதைக் கோயிலுக்கு அளித்துவிட்டுச் சாரத்திற்குக் குடிபெயர்ந்ததையும் கோவிந்தராஜன் சொல்கிறார். பிறந்து வளர்ந்த இடத்திற்கே திரும்பி வந்து பணிபுரிய முடிவதில் அவருக்கு மகிழ்ச்சி. செட்டிக் கோயிலில் தேவைப்படும் பணிகளுடன், இக்கோயிலையும் வேறு 2 கோயில்களையும் அவர் கவனித்துக்கொள்கிறார்: பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சுந்தர விநாயகர், மற்றொன்று.
“வளாகத்தில்” லாட சின்ன அம்மனுக்கு ஒரு முதன்மைக் கோயில் உள்ளது; அவர் ஒரு நாக தேவியாகத் தோன்றுகிறார்: படமெடுத்த பாம்பின் உடலிலிருந்து அவருடைய முக வடிவம் வெளிப்படுகிறது. அர்த்த மண்டபத்தில் ஒரு மூஷிக வாகனமும் ஓர் ஈட்டியும். அம்மன் கோயிலில் மூஷிகம் ஏன் என்று கோவிந்தராஜனால் விளக்க முடியவில்லை. நுழைவாயிலின் இருபுறமும் ஸ்ரீ விக்னேஸ்வரரும் ஸ்ரீ சௌந்திரவல்லியும் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள். வெளியே முகப்பில் பாவாடைராஜன் நிற்கிறார், ஒரு பலிபீடமும் வேலும் உள்ளன.
ஒரு பெரிய, அழகிய அரச மரமும் அதனருகே ஒரு சிறிய வேம்பும், (கிழக்கு நோக்கிய) நாகப் பிரதிஷ்டைக் கற்களும், எங்கோ ஒரு கோயில் கோபுர அலங்காரத்திலிருந்து எடுத்து வந்து இங்கே வைத்தவை போலத் தோன்றும் (தெற்கு நோக்கிய) ஒரு விநாயகரும் 2 எலிகளும் உள்ளன.
தொலைவு முனையில், மூஷிக வாகனத்துடன் ஒரு ஜெய விநாயகர் சன்னிதியும், ஒரு ஜெய வீர ஆஞ்சநேயர் சன்னிதியும்.
பால் அபிஷேகம், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ள சிலையை நீலமாக்குகிறது என்று அருகிலுள்ள ஒரு தேநீர்க் கடைக்காரர் சொல்லி வந்ததாகச் சங்கமித்ரா சொல்கிறார். அம்மனும் அவ்வாறே, அவருடைய கழுத்து நீலமாகிறதாம்.
இங்கே வந்துகொண்டிருந்த ஒரு துறவியின் ஜீவ சமாதி இடம் இக்குளம் என்கிறார்கள். அதனருகே அமர்ந்தால் இன்றும் “ஓம்” கேட்கும் என்றார் வேறொருவர். ஆனால் கொசுக்கள் மிக அதிகம் என்பதால் பெரும்பாலோரால் மாலையில் இருக்க முடிவதில்லை.
இங்கே வந்திருக்கலாம், அல்லது ஒளிந்திருக்கலாம் என்று பாரதியாரைப் பற்றியும் சொல்கிறார்கள் (அவருடைய வீடு இதே வீதியில் சற்று மேலே உள்ளது என்பதை அறியும் வரை சங்கமித்ரா இதை நம்பவில்லை); புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை, இவ்விடம் தெரியுமாறு அருகில் எங்கோ வாழ்ந்தது பற்றியும் சொல்கிறார்கள்.
இதைத் தங்கள் குலதெய்வமாக நம்பும் பக்தர்கள் (இவர்கள் யார்/ எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்களுக்குத் தெரியாது) காது குத்தவும், மொட்டை அடிக்கவும், பிற சிறு பூசைகளுக்கும் இங்கே வருகிறார்கள். பின்புறத்திலுள்ள தற்காலிகச் சிறு அடுப்புகளில் பொங்கலோ, சில நேரங்களில் இறைச்சிப் படையல்களோகூடச் சமைக்கிறார்கள்.




